தமிழ்நாட்டில் பல கருவிகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் உண்டு. அவற்றையெல்லாம் இளம் தலைமுறையினர் அறியாதே இருக்கின்றனர். அவற்றின் பெயர்களை ஆங்கிலத்தில் சொன்னால்தான் புரிகிறது. எடுத்துக்காட்டாக, சுத்தியல் (ஹாமர்), திருப்புளி (ஸ்குரு டிரைவர்), குறடு (கட்டிங் பிளேயர்), ரம்பம் (சா) என்பனவற்றைச் சொல்லலாம்.
ரம்பம், வாள் என்றும் சொல்லப்பட்டது. வாள் பட்டறை என்று மரம் அறுக்கும் இடத்துக்குப் பெயர். திருகு (ஸ்குரு) என்றும் திருகாணி என்றும் (நகை - தோடுகளில் இருப்பது) சொற்கள் நம்மிடையே இன்றும் உண்டு.
பழகு தமிழ்ச் சொற்களை மறந்துவிட்டால், தமிழில் சொல்வளம் - சொற் பெருக்கம் குறைய வாய்ப்புண்டு. கணினி வரவுக்குப் பின் புதிய பல சொற்களும் தமிழுக்கு வந்தன. தொடுதிரை, சொடுக்கி, முகப்பக்கம், இணையதளம், வலைமுகவரி, மின்னஞ்சல் இப்படிப் பல உள்ளன. தமிழில் புதிய சொற்களை உருவாக்க வழி இருப்பதால் நாம் பிற மொழிச் சொல்லைப் பெரும்பாலும் அப்படியே வைத்துக் கொள்ள வேண்டியதில்லை. "டெக்னிக்' என்பதை தொழில்நுட்பம் எனத் தமிழில் சொல்லுகிறோம். இந்தியில் டெக்னிக் - டெக்னிக்காகவே பயன்படுத்தப்படுகிறது.
ஆனாலும் சில போதுகளில் இடர் தோன்றாமல் இல்லை. இருப்புப்பாதை (ரயில்வே)யில் ஓடும் வண்டியை ஆகுபெயராக ரயில் என்றே குறித்தோம். நிலக்கரியில் ஓடிய காலத்தில் புகைவண்டி எனத் தமிழில் சொன்னோம். ஈழத்தில் புகைரதம் என்றார்கள். (ரதம்- வடசொல்) இப்போது ரயிலைத் தொடர்வண்டி என்று சொல்லுகிறோம். சிலர் கேட்கிறார்கள்: இரண்டு பேருந்து இணைத்துச் செல்வதும் தொடர்வண்டிதானே? ஒன்றின் பின் ஒன்றாகத் தொடர்வன எல்லாம் தொடர்வண்டிகள்தாமே! வேறு சொல் இல்லையா? இந்தியில் வண்டி எனப் பொருள்படும் காடியைப் பயன்படுத்துகிறார்கள். (காடி தமிழிலும் இருந்துள்ளது பற்றி முன்னரே எழுதியுள்ளோம்)
தமிழில் மிதிவண்டி முதலாக, மகிழுந்து (ஸ்ரீஹழ்) வரை எல்லாவற்றையும் வண்டி என்று சொல்லும் முறை உள்ளது. ரயில் என்பதைத் தமிழ் எழுத்துமுறைப்படி இரயில் ஆக்கி, இரயில் வண்டி என்று கொள்ளலாமோ? என்று நினைக்கிறோம். எழுதும்போது "இ' சேர்த்தாலும் சொல்லும்போது ரயில் என்றே சொல்லலாம்.
அறிஞர்கள் தம் கருத்தை அல்லது வேறு சொல்லை அளிப்பார்களாக. ஒருவர், ""பால்கனிக்குத் தமிழ் என்ன?'' என்று கேட்டார். பால்கனி தமிழ்தானே! பால், கனி (பழம்) தமிழ்ச் சொற்கள் அல்லவோ என்று விளையாட்டாகச் சொல்லிவிட்டுச் சிந்தித்தோம். நிலா முற்றம் என்று சொல்லலாமே! நிலாமொட்டை மாடியிலும் நன்றாகத் தெரிந்தாலும் வீட்டின் ஒரு பகுதியான பால்கனியில் நின்று நிலவைப் பார்க்க முடியும்.. அதனால் நிலா முற்றம் எனலாம். "வேயா மாடமும் வியன்கல இருக்கையும்' என்று சிலப்பதிகாரத்தில் ஒரு தொடர் உண்டு. இதில் வேயா மாடம் - மேலே கூரை வேயப்படாத திறந்தநிலை மாளிகை எனலாம். இப்போதெல்லாம் சில உயர்நிலை உணவகங்களில் "ரூஃப் கார்டன்' எனும் இடத்தில் உணவு பரிமாறுகிறார்கள். இதுவே வேயா மாடம். "மான்கள் காலதர் மாளிகை' பற்றியும் சிலம்பில் வருகிறது. முன்னரே எழுதியுள்ளோம். ஈண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுதல் நல்லது. மானின் கண்போல் வடிவமைக்கப்பட்ட துளைகளைக் கொண்ட காற்றுவீசும் வழிகள் அமைக்கப்பட்ட மாளிகை. காற்றுவீசும் வழி எது? இன்று ஜன்னல் (சன்னல்) என்கிறோமே, அதுதான். சிலர் "சாளரம்' என்றும் சொல்வர். இதற்கு அழகான தூய தமிழ்ச் சொல் காலதர் (கால் - காற்று; அதர் - வழி)
தீபாவளி என்னும் சொல் தீபம் + ஆவளி என்னும் சொற்களின் சேர்க்கை. தீபங்களின் வரிசை என்று பொருள். தீபம் + ஆவளி இரண்டும் வடசொற்களே. வடக்கே தீபங்களை அடுக்கி வரிசையாக ஏற்றி இன்னும் வழிபடுகிறார்கள். (நாம் கார்த்திகைத் திருநாளில் செய்கிறோம்). தீபாவளியைத் தீப ஒளித்திருநாள் ஆக்கியிருக்கிறோம். ஒளி - தூய தமிழ்ச்சொல்; தீபம் வடசொல்லே.
மகவுப்பேறா? மகப்பேறா?
மகப்பேறு மருத்துவமனை என்று பலகை பார்க்கிறோம். நாமும் எழுதுகிறோம். "மகவு என்றால்தான் பிள்ளை; அதனால் மகவுப் பேறு மருத்துவமனை என்றுதானே இருக்க வேண்டும்' எனப் பெரியவர் ஒருவர் நம்பால் கேட்டார்.
உண்மைதான், தொல்காப்பியத்திலும் இளமைப் பெயர்கள் பற்றி நூற்பா (சூத்திரம்) 1500-இல் மகவு என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆண்மகன், பெண்மகள் என்று எழுதுகிறோம். மகன், மகள் எப்படி வந்தன? மகவு என்னும் சொல் மக - எனத் திரிந்து அன் விகுதி பெற்று ஆண்பாலாகவும், அள் விகுதி பெற்றுப் பெண்பாலாகவும் ஆயின என்று சொல்லலாம்.