பிழையின்றித் தமிழ் பேசுவோம்,  எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்

நன்றி : தினமணிக்கதிர்


மொழிப்பயிற்சி - 9

ஞானசம்பந்தர் - ஞானச் செல்வர்
இரண்டிலும் ஞான என்பது நிலைமொழி.
ஒன்றில் ஒற்று மிகாமலும்,​​ ஒன்றில் மிகுந்தும் வந்துள்ளதேன்?

சம்பந்தர் (சம்பந்தம்) வடசொல். 'sa' என்ற ஒலியை உடையது. செல்வர் என்பது தமிழ்ச்சொல். செ (che)​​ என அழுத்தி ஒலிக்கப்படுதலின் வல்லெழுத்து மிகுந்தது.
ஞானச்சம்பந்தர் என்பதும் ஞான செல்வர் என்பதும் பிழையாகும்.
ஞானபீடம் - இலக்கியப் பீடம்
ஞான பீட விருது என்கிறோம். இங்கே ஒற்று மிகவில்லை.
இலக்கியப் பீடம் இதழ் என்கிறோம். இங்கே ஒற்று மிகுந்துள்ளது. ஏன்?
ஞானம்,​​ பீடம் இரண்டும் வடசொற்கள்.
B - பீடம் என்பது இருக்கை. "இலக்கியம்" தமிழ். B - பீடத்தையும்,​​ P - பீடம் எனத் தமிழ் ஒலிப்படுத்தி உரைத்தலால் இலக்கியப்பீடம் என்று ஒற்று மிக்கது. மற்றும் பீடு + அம் என்றும் பிரித்துப் பெருமை,​​ அழகு எனப் பொருள் காணலும் ஆகும். (அம்-விகுதி)

ஒருகால் - ஒருக்கால்
"உன்னால் ஒருக்காலும் இதைச் செய்ய முடியாது" என்று பேசுகிறோம்.
ஒரு பொழுதும்,​​ எந்தச் சமயத்திலும் முடியாது என்பதே இதன்பொருள்.
ஆனால் இச்சொல் ஒருகாலும் என்றிருப்பதே முறை,​​ நெறி. இங்கே வல்லொற்று மிகாது.

ஒரு பொழுதும் என்பதை,​​ ஒருப்பொழுதும் என்று சொல்லுவோமா?
இலக்கியச் சான்று:-
"ஒருகால் நினைக்கில் இருகாலும் தோன்றும் முருகா என்றோதுவார் முன்".
எதிர்க்கட்சி - எதிர்கட்சி
எதிரில் உள்ள கட்சி அல்லது எதிரியாக இருக்கும் கட்சி எதிர்க்கட்சி.

ஒரு விளையாட்டில் இரண்டு கட்சிகள் மோதும்போது எதிர் எதிரே இருந்து மோதுவதால் எதிர்க்கட்சி எனல் சரியே.
இவ்வாறே சட்டமன்றத்திலும் ஆளும் கட்சிக்கு வரிசைக்கு எதிரே இருப்பது எதிர்க்கட்சி எனல் பொருத்தமே.
ஆனாலும் எதிர்க்கட்சி என்ன செய்கிறது?
நேற்று எதிர்த்தது,​​ இன்று எதிர்க்கிறது,​​ நாளையும் எதிர்க்கும்.
எதிர்த்த,​​ எதிர்க்கிற,​​ எதிர்க்கும் கட்சியை எதிர்கட்சி என வினைத்தொகையாகச் சொல்லுதலும் சரியாகுமன்றோ?

ஒற்று இரட்டித்தல்:​​-
ஒற்றுமிகுதலோடு சேர்த்து எண்ணத்தக்கது ஒற்று இரட்டித்தல் என்னும் இலக்கண விதியாகும்.
சோறு + பானை = சோறுப்பானை என்று எழுதுவதில்லை. சோற்றுப்பானை என்கிறோம்.
ஆறு + வழி = ஆற்றுவழி என்கிறோம்.
சோறு,​​ ஆறு என்பவற்றுள் (ற் + உ= று) உள்ள "ற்" மற்றுமொன்று கூடி வருவதால் ஒற்று இரட்டித்தல் என்றுரைக்கிறோம்.
சோ+ ற் + ற் + உ = (சோற்று) ஒற்று இரட்டித்த பின் வலி (வல்லொற்று) மிகுந்து சோற்றுப் பானை என்றாகிறது.
அடையாறு + இல் = அடையாற்றில் என இங்கும் ஒற்று இரட்டித்தல் வேண்டும். அடையாறில் என்று எழுதுவது பிழை.

ஆற்றில் வெள்ளம் வந்தது என்றுதானே சொல்லுகிறோம். ஆறில் வெள்ளம் வந்தது என்று சொல்வதில்லையே.
மாடு + சாணம் = மாட்டுச்சாணம் என்கிறோம்.
வீடு + சோறு = வீட்டுச் சோறு என்கிறோம்.
இந்த இலக்கணத்தை மறக்க வேண்டாம்.

தமிழ்நாடு + அரசு = தமிழ்நாட்டரசு என்றுதான் எழுத வேண்டும்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் என்பது பிழை. தமிழ்நாட்டரசுப் போக்குவரத்துக் கழகம் என்பதே சரியானது.
தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம் என்று பிழையற்ற தமிழில் ஒரு நிறுவனம் குறிக்கப்படும்போது,​​ தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் ஏன் வந்தது? தமிழ்நாடு அரசு ஏன் வந்தது? தமிழ்நாட்டரசு என்று மாற்றுக.

கிணறு + தவளை = கிணற்றுத் தவளை.
காடு + பாதை = காட்டுப்பாதை என்றெல்லாம் மக்கள் சரியாகச் சொல்லும்போது நாடு + அரசு = நாட்டரசு என்றுதானே எழுத வேண்டும்?
கட்டுப்பாடு + அறை = கட்டுப்பாட்டறை எனச் சொல்க.
மேம்பாடு + திட்டம் = மேம்பாட்டுத்திட்டம் என்க.
நம்நாடு + சட்டம் = நம்நாட்டுச் சட்டம் தானே.
விளையாட்டு செய்திகள் என்று தொலைக்காட்சியில் காட்டுகிறார்கள். விளையாட்டுச் செய்திகள் என்று வல்லொற்று மிகுதல் வேண்டும்.
விளையாட்டைப் பற்றிய செய்திகள் என உருபும் பயனும் உடன் தொக்க தொகை இதுவாம். விளையாட்டுச் செய்திகளை விளையாட்டாய் எண்ணாதீர் (இக்குறிப்பில் ஒற்று இரட்டித்தல் இல்லை. வல்லொற்று மிகுதல் மட்டுமே) .