வலி - மிகா இடங்கள்!
First Published : 20 Nov 2011 02:00:42 AM IST
வல்லெழுத்து மிகாமல் (வலி) வருவது "வலிமிகாமை எனப்படும்.
சிறிய, பெரிய, நடைபெற்ற, அன்றைய என்பவை பெயரெச்சங்கள். பெயரெச்சங்களின் பின் வல்லெழுத்து மிகாது.
(எ.கா.) சிறிய பெட்டி, பெரிய பையன், நடைபெற்ற பொதுக்கூட்டம், அன்றைய பேச்சு.
துணி கிழிந்தது - என்ற தொடர் தொகாநிலைத் தொடர். இத்தொடரில் எழுவாய் முதலில் இருப்பதால் இது எழுவாய்த் தொடரானது. எழுவாய்த் தொடரில் பெரும்பாலும் வலி மிகாது.
அது, இது, எது; அவை, இவை, எவை; அன்று, இன்று, என்று ஆகியவற்றின் பின் வலிமிகாது.
(எ.கா) அது செய், இது பார், எது தவறு; அவை பறந்தன, இவை காண், எவை சாப்பிட்டன; அன்று காண்போம், இன்று போவோம், என்று சாப்பிடுவோம்.
அத்தனை, இத்தனை, எத்தனை என்று வரும் இடங்களில் வலி மிகாது.
(எ.கா) அத்தனை சட்டைகள், இத்தனை செடிகள், எத்தனை கோடி, எத்தனை காலம்.
அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு; அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்று வரும் இடங்களில் வலிமிகாது.
(எ.கா) அவ்வாறு எழுது, இவ்வாறு பாடு, எவ்வாறு செய்வாய், அவ்வளவு பேர், இவ்வளவு காலம், எவ்வளவு தொலைவு.
ஒரு, இரு, அறு, எழு என்று வரும் இடங்களில் வலிமிகாது.
(எ.கா) ஒரு தடவை, ஒரு தரம், இரு காகங்கள், இரு படங்கள், அறுசுவை உணவு, எழுகடல்.
இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகாது. இரண்டு சொற்கள் நின்று இரண்டாம் வேற்றுமை "ஐ' உருபு தொக வருவது இரண்டாம் வேற்றுமைத் தொகை.
(எ.கா) விடுதலை பெற்றது, குறள் கற்றான், பொன் சேர்த்தான், தமிழ் படித்தார், நீர் குடித்தது, பங்கு பிரித்தான், பறவை பிடித்தான், தேர் செய்தான்,
(பொருள் மயங்காதிருக்கும் பொருட்டுச் செய்யுளில் இரண்டாம் வேற்றுமைத் தொகையில் நிலைமொழி உயர்திணையாயின் வலி மிகுவதுண்டு).
நான்காம் வேற்றுமைத் தொகையில் (கு) உயர்திணைப் பெயர்களின் பின் வலி மிகாது.
(எ.கா) பொன்னி கணவன் (பொன்னிக்குக் கணவன்), ஊர் போயினர் (ஊருக்குப் போயினர்), பள்ளி சென்றனர் (பள்ளிக்குச் சென்றனர்).
ஆறாம் வேற்றுமைத் தொகையில் (அது, உடைய) நிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது.
(எ.கா.) கண்ணகி கை, தம்பி துணி, காளி கோயில், ஐயனார் கோயில்.
ஏழாம் வேற்றுமைத் தொகையில் (இல், உள், இடம், பின், கண், பால், கீழ், மேல் முதலியன) நிலைமொழி உயர்திணையாய் இருந்தால் வலி மிகாது.
(எ.கா) வாய் புகுந்தது.
வினைத்தொகையில் வலி மிகாது.
(எ.கா) சுடுசோறு, பாய்குதிரை, ஒலிகடல், குடிதண்ணீர், சுடுகாடு இவை வினைத்தொகைகள்.
மூன்று காலம் (இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம்) காட்டும் விகுதி மறைந்து வருவது வினைத்தொகை. எழுவாய்த் தொடரில் வலி மிகாது.
(எ.கா) பாம்பு கடித்தது, யானை பெரிது.
அடுக்குத்தொடரில் வலி மிகாது.
(எ.கா) பூச்சிபூச்சி, பார்பார், படபட, கிடுகிடு, சலசல, கலகல.
உம்மைத் தொகையில் வலி மிகாது.
(எ.கா) முத்துபவளம், செடிகொடி.
பெயரெச்சம், வினையெச்சத்தின் பின் வலி மிகாது.
(எ.கா)கெட்டதயிர், எழுதின பாட்டு, வந்து பார்த்தார், நின்றுபோனார்.
ஒரு, இரு, அறு, எழு, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, ஒன்பது, நீ, பல, சில ஆகிய இச்சொற்களுக்குப் பின் வருமொழி முதலில் க, ச, த, ப வருக்கம் இருந்தால் வல்லெழுத்து மிகாது.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிரப் பிற பெயரெச்சங்களின் பின்வரும் வல்லெழுத்து மிகாது. ஓடிய குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடிய என்பது பெயரெச்சம். ஓடாத குதிரை என்னும் தொடரில் ஓடாத என்பது ஈறுகெட்ட பெயரெச்சம். ஓடாக் குதிரை என்னும் தொடரிலுள்ள ஓடா என்பது ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். இந்த ஈறுகெட்ட எதிர்றைப் பெயரெச்சங்களின் பின் வரும் வல்லெழுத்து மிகும். ஈறுகெடாத பெயரெச்சத்தின் பின் வரும் வல்லெழுத்து மிகவே மிகாது.
கூப்பிடும் விளிப்பெயர், (தம்பீ, போ) வியங்கோள் வினைமுற்று (வாழி பெரியோய், வீழ்க கொடுமை) ஆகிய இவற்றின் பின் வல்லெழுத்து (வலி) மிகாது.
ன்று, ந்து, ண்டு என்று முடியும் வினையெச்சங்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாது. இலக்கண விதிப்படி மென்தொடர்க் குற்றுகரச் சொற்களுக்குப் பின் வல்லெழுத்து மிகாது.
(எ.கா.) என்று கூறினார், வந்து கேட்டார், கண்டு பேசினார், நன்று பேசினாய்.
இரு வடமொழிச் சொற்கள் சேர்ந்து வரும் தொடரில் வலி மிகாது.
(எ.கா.) ஆதிபகவன், தேசபக்தி.
ஆ, ஓ, யா என்னும் கேள்வி வினாக்களுக்குப் பின் வலி மிகாது.
(எ.கா.) அவனா சொன்னான்?, தம்பியோ கேட்கிறான்? யா சிறியன? (யா-யாவை).
வன்தொடர்க் குற்றியலுகரச் சொற்களின் பின் "கள்' "தல்' என்னும் விகுதிகள் சேரும்போது வலி மிகத் தேவையில்லை. வலி மிகுந்தாலும் தவறில்லை.
(எ.கா.) எழுத்துகள், வாக்குகள், வாழ்த்துகள், தோப்புகள், தூற்றுதல், வாழ்த்துதல், கூம்புதல்.
இப்படி எழுதுவதற்கு விதி உண்டா? என்று கேட்பவருக்கு,
"இடைச்சொல், உரிச்சொல், வடசொல் இவற்றுக்குச் சொல்லிய விதிகளுள் கூறப்படாதனவும், போலியும், மரூஉவும் பொருந்திய வகையில் புணர்தலைக் கொள்ளுதல் அறிவுடையோர் யாவர்க்கும் முறையாகும்' என்று நன்னூல் சூத்திரம் விடையளிக்கிறது. ஆனால், பழைய நூல்களிலும், புதிய நூல்களிலும் வாக்குக்கள், எழுத்துக்கள், வாழ்த்துக்கள், வகுப்புக்கள், கருத்துக்கள் என்றே அச்சாகியுள்ளதைக் காணலாம். இவை செவிக்கு இனிமை தராதிருப்பதால்,(இன்னோசை கருதி) வலி மிகாமல் எழுதுவதே சிறந்ததாகும்.
(குறிப்பு: "வலி மிகும் இடங்கள்' மற்றும் "வலி மிகா இடங்கள்' ஆகிய இவ்விரு கட்டுரைகளும் தொல்காப்பியம், நன்னூல், மற்றும் அ.கி.பரந்தாமனாரின் "நல்ல தமிழில் எழுதுவது எப்படி?', நல்ல தம்பியின் "தாய்மொழியில் பிழைநீக்கி எழுதப் பழகுவோம்', என்.ஸ்ரீதரனின் "பிழையின்றித் தமிழ் எழுதுவோம்' ஆகிய நூல்களை ஒப்புநோக்கி எழுதப்பட்டவை).