நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 21-30

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 21:-

சகோதரர் எனும் சொல்லுக்கு உடன்பிறந்தவர் என்பது பொருள்.
சக + உதரர் (உதரம் - வயிறு) ஒரே வயிற்றில் பிறந்தவர் சகோதரர்.
தனித் தமிழில் உடன் பிறந்தார். இது பொதுச்சொல்.

ஆனால் தமையன், தமக்கை, தம்பி, தங்கை எனும் சொற்கள் அமைந்த தமிழின் சிறப்பு என்னே?
- தம் + ஐயன் - தமக்கு மூத்தவன் = தமையன் (அண்ணன்)
- தம் + அக்கை = தமக்கை - தமக்கு மூத்தவள் - அக்கா
- தம் + பின் = தம்பி
எனத் திரிந்தது.
- தம்பின் பிறந்தவன் - தம்பி
- தம் + கை = தங்கை - தமக்குச் சிறியவள் - தங்கை (கை எனும் சொல் சிறிய எனும் பொருளில் வந்தது.)
இப்படியெல்லாம் ஆங்கில மொழியில் சொல்லிட முடியுமா?

நந்தமிழில் ஒவ்வொரு நிலைக்கும் தனித் தனிச் சொற்கள் இருக்கும்போது, ஆங்கில மொழியின் தாக்கம் காரணமாக இளைய சகோதரர், மூத்த சகோதரர் என்று தமிழர்கள் பேசுவது சரியா?

குழந்தைப் பருவம் என்று சொல்லுகிறோம். இந்தக் குழந்தைப் பருவத்திலேயே பத்துப்பிரிவுகளைக் கண்டவர்கள் தமிழர்கள். பிள்ளைத் தமிழ் என்னும் சிற்றிலக்கிய வகை அறிவீர்கள்.
ஆண்பால் பிள்ளையாயின்
01. காப்புப் பருவம்
02. செங்கீரைப் பருவம்
03. தாலப் பருவம்
04. முத்தப் பருவம்
05. சப்பாணிப் பருவம்
06. அம்புலிப் பருவம்
07. வருகைப் பருவம்
08. சிற்றில் பருவம்
09. சிறுதேர்ப் பருவம்
10. சிறுபறைப் பருவம்
என்றும்,

பெண்பால் பிள்ளைத் தமிழாயின், இறுதி மூன்றும் மாறுபட்டு,
08. கழங்கு (தட்டாங்கல்)
09. அம்மானை
10. ஊசல் (ஊஞ்சல்)
என்றும் பகுத்துப் பிரித்தவர்கள் தமிழர்கள்.
பெண்களின் பருவத்தையும், வயதிற்கேற்ப ஏழு பருவங்களாகப் பிரித்தனர்.
அவை,
01. பேதை
02. பெதும்பை
03. மங்கை
04. மடந்தை
05. அரிவை
06. தெரிவை
07. பேரிளம் பெண்
என்பன.
(ஏழு வயதில் தொடங்கி நாற்பது வயதுவரை).
இவை பற்றியெல்லாம் விரிக்கிற் பெருகும். இந்த அளவே போதும் எனக் கருதுகிறேன்.

எழுத்துப் பிழைகள்:-
சொற்களின் பொருள் பற்றிய சிந்தனையின்மையால் ஊடகங்களில் பற்பல எழுத்துப் பிழைகளை அவ்வப்போது செய்து வருகிறார்கள்.
ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மங்கையர்கரசி என்று பெயர் எழுத்தில் காட்டப்பட்டது.

மங்கையர்க்கு + அரசி = மங்கையர்க்கரசி என்று சரியாக எழுதத் தோன்றவில்லை போலும்.
ஒரு செய்தித்தாளின் இணைப்பு வார இதழில் அங்கயர்க்கண்ணி என்று எழுதியிருந்தார்கள்.
அம் + கயல் + கண்ணி = அங்கயற்கண்ணி என்றாகும்.
அழகிய மீன் போன்ற கண்களுடையாள் என்பது பொருள்.
கயற்கண்ணியைக் கயர்க்கண்ணி ஆக்குதல் அழகா?
"கொஞ்சம் கவிதை கொஞ்சம் தேனீர்" என்று ஒரு நிகழ்ச்சி எழுத்தில் காட்டப்பட்டது.
தேனீர் எனில் தேன் கலந்த நீர் (இனிய நீர்) என்று பொருள்.
இச்சொல் தேநீர் என்றிருத்தல் வேண்டும்.
தே(யிலை) + நீர் = தேநீர் ஆனது.
இன்னும் சரியாகச் சொன்னால் Te என்பதன் தமிழ் ஒலி தே இதனோடு நீர் சேர்த்துத் தேநீர் என்று டீயைச் சொல்லுகிறோம்.
இவ்வாறே காஃபியைக் காப்பி என்றுரைத்தல் சாலும். மூக்கைத் தலையைச் சுற்றிப் பிடிப்பதுபோல், மாட்டுக் குளம்பின் வடிவில் (பிளவுபட்டு) காப்பிக் கொட்டை இருப்பதால் அதனைக் குளம்பி எனல் சரியானதுதானா? விவரம் தெரியாதவர் இதனைக் குழம்பி என்றுரைத்துக் குழப்பிவிடுகிறார்கள்.

படித்தவர்களும் ஐந்நூறு என்னும் சொல்லை ஐநூறு என்றெழுதுகிறார்கள். இதழ்களில் வருகின்ற கவிதைகளில் கதைகளில் இச்சொல்லைப் பலமுறை பார்க்க நேர்கிறது.
ஐந்து + நூறு = ஐந்நூறு ஆதல் இலக்கண நெறி.
"ஐ! நூறு" என்று வியத்தல் பொருளில் ஐநூறு விளங்குகிறது.
ஐ - நூற்றை விட்டு இனி, ஐந்நூற்றைப் பிடிப்போம்.

சாமித்துரை என்ற பெயரை சாமித்துறை என்று ஒரு செய்தியேட்டில் காண நேர்ந்தது.
துரையாக (பிரபு) இருப்பவரை ஒரு நீர்த்துறை - படித்துறை ஆக்குதல் சரியா?
மற்றொரு செய்தித்தாளில் கழுத்தை அறுத்துக் கொள்ளப்படும் என்று படித்தபோது மனம் பதறியது.
கழுத்தை அறுத்துக் கொல்லப்படும் ஆடுகளை விட்டு விட்டுத் தமிழை ஏன் கொல்லுகிறார்கள்?
தொலைக்காட்சி - சிறுவர் தொடர்களில் அடிக்கடி போடா கொய்யா என்ற சொல்லைக்கேட்டுள்ளேன். இஃது என்ன சொல்?
ஒன்றும் புரியவில்லை.
அண்மையில் பழங்களின் விலை விவரம் பற்றித் தொலைக்காட்சியில் கூறியவர் கொய்யா (எர்) என்றபோதுதான் ஓகோ! நமது கொய்யாப் பழம்தான் இது என்று புரிந்து கொண்டேன்.
கொய்யாவை - கொய்யா என்பதும் ஒலிப்புப் பிழை.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 22:-

வெளிநாட்டிலிருந்து ஒரு பெரிய தமிழ் விழாவுக்கான அழகான அழைப்பிதழ் ஒன்று வந்தது. அதில் "ராம காதையை உ"றை"த்திடக் கேட்போரும், படிப்போரும் நரகமெய்திடாரே" என்று இறுதியில் பெரிய எழுத்துகளில் எழுதப்பட்டிருந்தது. உ"ரை"த்திட என்னும் இடையின "ர" கரத்திற்கு மாறாக உ"றை"த்திட வல்லினம் போட்டு அழுத்திவிட்டார்கள்.

ஐகாரம் நெட்டெழுத்து என்று அறிவோம். இதனை "அய்" என்று எழுதும்போது அரை மாத்திரை குறைகிறது என்று முன்னரே
சொல்லியுள்ளோம். சிலர் இந்த "ஐ" போட்டுக் கூடவே ஒரு "ய்" போட்டு "ஐய்"யங்கார் பேக்கரி என்று விளம்பரப் பலகையில் எழுதி வைத்துள்ளார்கள்.
ஏன் இவரை இப்படி அழுத்த வேண்டும்!

ஒரு தொலைக்காட்சியில் ஒரு நடிகரின் பெயரை வெண்"ணீரா"டை என்று எழுதிக் காட்டினார்கள். வெண்"ணிற" ஆடை என்ற பொருள் பொதிந்த சொல்லை வெண்"ணீரா"டை என்று ஒரு பொருளும் அற்றதாக ஆக்கியதை என்ன சொல்ல? இப்படியெல்லாம் தமிழைச் சிதைப்பதைக் கண்டுகொள்ளாமல் இருக்கிறோம், நாம்தாம் தமிழர்கள்!

பொருட் பிழைகள்:-
காட்டு வேடனாகிய திண்ணன், தன் சிவபக்தி காரணமாகத் தன் கண்ணை எடுத்துக் குருதி வந்த சிவலிங்கத்தின் கண்ணில் அப்பியதால் (அப்புதல் - அழுத்திவைத்தல்) அவன் அவராகிக் கண்ணப்பர் ஆனார். திண்ணன் என்றால் தின் என்று மிக்க உடல் வலிமை கொண்டவன். உறுதி மிகக் கொண்டவன் என்று பொருள் சொல்லலாம்.

கண்ணப்பநாயனார் கதையை ஓர் ஊடகத்தில் ஒருவர் சொல்லும்போது, கண்ணப்பரது பழைய பெயர் திண்ணப்பர் என்று சொன்னார். திடுக்கிட்டோம்.
இது என்ன? பொருள் புரியாமல் பேசுகிறாரா? புரிந்துதான் பேசுகிறாரா? எனும் ஐயம் எழுந்தது.

வைணவ சமய வரலாற்றில் திருக்கோட்டியூர் குறிப்பிடத்தக்க சிறப்பு மேவிய தலம். இந்தத் "திருக்கோட்டியூரை", இந்நாளில் பலரும் "திருக்கோஷ்டியூர்" ஆக்கிவிட்டார்கள். "கோஷ்டி" எனில் ஒரு குழுவை, கும்பலைக் குறிக்கும் சொல். ஏன் இங்கு கோஷ்டி வந்தது? நீளமாகத் தறியில் நெய்து, வெட்டி, வெட்டி எடுக்கப்பட்டதைத் தமிழர் "வேட்டி" என்றனர். இந்த வேட்டியைப் பிற்காலத்தில் "வேஷ்டி" ஆக்கினார்கள் அல்லவா? அப்படித்தான் கோட்டியூர் --- கோஷ்டியூர் ஆயிற்று
(துண்டுதுண்டாகத் துண்டிக்கப்பட்டது துண்டு என்பதும் அறிக).

"ஏமாந்து போனான்" என்று பலரும் எழுதுகிறோம். பேசுகிறோம். இது சரியான சொல்தானா?
ஏமம் எனில் பாதுகாப்பு. "ஏம வைகல் எய்தின்றால் உலகே" எனக் காண்க.
விளைவு, இன்பம், ஏமம் என்பார் திருவள்ளுவரும்.
ஏமாற்றுதல் என்னும் சொல் பொருளுடையது. வஞ்சித்தல், நம்பிக்கையைக் கெடுத்தல் என்று சொல்லலாம்.
வஞ்சிக்கப்பட்டவனை, நம்பிக்கை தொலைந்தவனைத்தான் நாம் ஏமாந்தான், ஏமாந்து போனான் என்று சொல்கிறோம்.
"கம்பன் ஏமாந்தான்" என்று திரைப்பாடலும் எழுதிவிட்டார்கள். ஆனால் இது பிழையான சொல்.
"ஏமாறினான், ஏமாற்றப்பட்டான்" என்பனவே சரியான சொற்கள்.

திருக்காளத்தி கோவில் கோபுரத்தில் விரிசல் கண்டபோது அதனை ஒரு தீய சகுனமாகக் (வருந்தீமைக்கு முன்னறி குறி) கருதினர் மக்கள்.
அதுபற்றிச் செய்தித்தாளில், அதனை "உட்பாதம்" என்று எழுதியிருந்தனர்.
அஃது "உட்பாதம்" அன்று; அஃது "உற்பாதம்" (வடசொல்).
உள்பாதம்தான் --- உட்பாதம் (அடி) ஆகும்.

இப்படித்தான் வைகுண்ட "ஏகாதசி" (பதினோராம் திதி) என்பதை, "ஏகாதேசி" என்று செய்தியாளர் சிலர் தொலைக்காட்சியில் படித்தார்கள்.
ஏகம் - ஒன்று; தேசம்- தேசி - தேசத்தான்.
ஒரே நாட்டினன் என்று "ஏகாதேசி" என்பதன் பொருள் ஆகிவிடும், இசையால் பொருள் கெடல் உண்டு.
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்!" என்பது அனைவரும் அறிந்த தொடர்.
"கேளிர்" என்பதற்கு உறவினர் என்று பொருள்.
கேள் - கேளிர்.
ஆனால், அதனை நீட்டிக் "கேளீர்" எனில் கேட்பீராக என்பது பொருள். "யாவரும் கேளீர்" என்று இசையின் பொருட்டு நீட்டப்படும்போது, பொருள் சிதைந்து குன்றிவிடுகிறது என்பதை நாம் உணர வேண்டும்.

ஒருவராகத் தனித்திருப்பவரை "ஒண்டிக்கட்டை" என்று சொல்லும் வழக்கமிருக்கிறது. எங்காவது சென்று மறைந்து கொள்வதை "ஒண்டுதல்" எனலாம்.
ஒண்டுதல், ஒட்டிக் கொள்ளுதல் என்றும் சொல்லலாம். ஒற்றையாளை இந்தச் சொல் எப்படிக் குறிக்கும்? ஒன்றிக்கட்டை என்றிருந்தால் இச்சொல் சரியாக இருக்கும். ஒன்றியாய் என்றால் ஒருவனாகவோ, ஒருத்தியாகவோ இருக்கலாம். ஒன்று என்பதிலிருந்து வந்த சொல்.

சங்ககால ஒளவையார் வேறு; நீதிநூல்கள் பாடிய ஒளவையார் வேறு. இச் செய்தியறியாமல் ஓர் இலக்கியச் சிற்றிதழில் ஒருவர் எழுதியிருந்த கட்டுரையில் ஒளவையார் என்ற சங்கப் புலவர் இயற்றிய ஆத்திச்சூடி, கொன்றைவேந்தன், மூதுரை போன்ற நூல்களை நாம் அவசியம் படிக்க வேண்டும் என்றிருந்தது. எவ்வளவு பெரிய பொருட்பிழை!

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 23:-

நுட்பச் செய்திகள்:-
சபா, சபை என்று வடசொற்களால் குறித்தவற்றை இந்நாளில் நாம் மன்றம், அரங்கம் என்று சொல்லி வருகிறோம்.
- மன்றம் என்பது ஓர் அமைப்பையும்
- அரங்கம் என்பது விழா நடைபெறும் கூடத்தையும்
பொதுவாகக் குறிக்கும்.
- மாமன்றம்
- பெருமன்றம்
- பேரவை
- முற்றம்
என்னும் சொற்களும் நல்ல தமிழில் இன்று வழக்கத்தில் உள்ளன.
பழைய நாட்களில் மரத்தடியையும், தொழுவத்தையும் கூட "மன்றம்" என்றனர். அப்போதெல்லாம் மரத்தின் அடியில் (நிழலில்) பலர் கூடிப் பேசியிருந்தமையால் - பதினெட்டுப்பட்டிப் பஞ்சாயத்து - நாட்டாண்மையெல்லாம் - மரத்தடியில் நிகழ்ந்தமையால் மன்றம் எனும் சொல்லின் பொருள் பொருத்தமடைகிறது.
ஆனால் தொழுவம் என்பது மாடுகளைக் கட்டும் இடம். மாட்டுத் தொழுவம் என்ற பொருள் இந்நாளின் மன்றத்தோடு பொருந்தவில்லை.

அரங்கம் என்பது சிலம்ப விளையாட்டு நிகழும் இடத்தைக் குறித்தது. சிலம்ப விளையாட்டைத் திறந்த வெளியிலோ ஒரு பெரிய கூடத்திலோ இன்றும் நிகழ்த்தக் காண்கிறோம்.
அரங்கம், பெரிய கூடத்தை உணர்த்தும் சொல்லாகப் பொருந்துகிறது. ஆனால் அதற்குச் சுடுகாடு என்ற பொருளும் உண்டு என்று அறியும் போது நமக்கு அச்சம் ஏற்படுமன்றோ?

ஆகியோர், முதலியோர்:-
ஆகியோர், முதலியோர் எனும் இரண்டு சொற்களை இடவேறுபாடு கருதாமல் பொருத்தம் இல்லாமல் இந்நாளில் பலர் எழுதி வருகிறார்கள்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் தேவாரம் பாடியவர் ஆவர். ஆகிய என்ற சொல்லை வரையறுத்த எண் முற்றிலும் குறிக்கப்படும் இடங்களில்தான் பயன்படுத்த வேண்டும்.
கண்ணப்ப நாயனார், சிறுத்தொண்ட நாயனார், அப்பூதியடிகளார் முதலிய நாயன்மார்களைப் பற்றிப் பெரிய புராணம் பேசுகிறது.
கண்ணப்பர், சிறுத்தொண்டர், அப்பூதியோடு முடியவில்லை. இன்னும் பலர் (அறுபத்து மூவர்) இருப்பதால் முதலிய எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.
இவற்றை மாற்றிப் பயன்படுத்துதல் பிழை.

ஆகிய, ஆகியோர் என்று சொல்லும்போது அத்தொகுப்பில் உள்ளவர் அனைவர் பெயரும் இடம் பெற வேண்டும். ஒரு தொகுப்பில் உள்ள சிலவற்றைச் சொல்லி, பிற சொல்லாமல் விடும்போது முதலிய (முதலாகவுடைய) என்னும் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.
1. நற்றிணை
2. குறுந்தொகை
3. ஐங்குறுநூறு
4. பதிற்றுப் பத்து
5. பரிபாடல்
6. கலித்தொகை
7. அகநானூறு
8. புறநானூறு
"ஆகிய" எட்டு நூல்களும் எட்டுத் தொகை எனப்படும்.

1. திருமுருகாற்றுப்படை
2. பொருநராற்றுப் படை .......
"முதலிய" பத்து நூல்கள் பத்துப்பாட்டு எனப்படும்.
எட்டுத் தொகையில் எட்டு நூல்களும் சொல்லப்பட்டனவாதலின் "ஆகிய" எனும் சொல் பயன்பட்டது.
பத்துப்பாட்டில் இரண்டு மட்டுமே குறித்ததால் "முதலிய" எனும் சொல் பயன்படுத்தப்பட்டது.

இப்போதெல்லாம் தொலைக்காட்சியில் "தீப ஒளி"த் திருநாள் என்ற சொல்லாட்சி கண்டு, கேட்டு வருகிறோம்.
தீபாவளி எனும் சொல் பிழையான சொல்லா?
தீபம் + ஆவளி = தீபங்களின் வரிசை என்பது இதன் பொருள்.
வடபுலத்தில் தீபங்களை (விளக்குகளை) வரிசையாக நிரம்ப ஏற்றி வழிபடும் பழக்கத்தால் வந்த சொல் இது.
நாமும் கூட, திருக்கார்த்திகை நாளில் தீபங்களை நிரம்ப ஏற்றுகிறோம் அல்லவா?
தீப ஒளியென்பதற்கு "விளக்கின் வெளிச்சம்" என்பது பொருள்.
விளக்கில் வெளிச்சம் வருவது இயல்புதானே?
இதில் என்ன சிறப்பு இருக்கிறது?
உண்மையில் பட்டாசுகளின் இரைச்சலும், வெளிச்சமும்தான் காணுகின்றோம். ஆதலின் தீபாவளியைத் தீப ஒளி ஆக்குதல் வேண்டுமா?

செருக்கு, தருக்கு:-
செருக்கு, தருக்கு என இரு சொற்கள் ஒன்றுபோல் இருப்பவை. ஆனால் நுட்பமான பொருள் வேறுபாடு உண்டு.
- ஒருவர்க்குத் தாம் கற்ற கல்வியால் செருக்கு இருக்கலாம். இருக்கவேண்டும்.
"ஞானச் செருக்கு" என்பான் பாரதி.
- ஆனால் நிரம்பக் கற்றுவிட்டோம் என்று தருக்கித் திரிதல் தகாது.
செருக்கு ஒரு பெருமிதம். அது கல்வியாலோ, கொடையாலோ, வீரத்தாலோ உண்டாகலாம்.
ஆனால் எதனாலும் மனிதர்க்கு தருக்கு உண்டாதல் தகாதாம். தன்னை விஞ்சியவர் எவருமிலர் என்னும் தருக்கு அழிவைத் தரும்.

பிழை தவிர்த்தல்:-
பேசுவதிலும், எழுதுவதிலும் ஏற்படக்கூடிய பிழைகளைத் தவிர்த்தல் எப்படி?
ஒற்றுப் பிழைகளைப் பொறுத்தவரையில் நாம் இயல்பாக வாய்விட்டுப் பேசிப் பார்த்தாலே எங்கு வல்லொற்று (க்,ச்,ட்,த்,ப்) மிகும் என்பதை அறியக் கூடும்.
வலிந்து நாமாக ஒற்றைத் திணித்தல் சரியன்று:-
ஒற்றை விட்டுவிட்டாலும் பொருட்சிதைவோ, விட்டிசைத்தலோ ஏற்படும்.
நிரம்பப் படித்தவர்களின் நூல்களில் கூட, ஒற்றுப் பிழைகளைக் காணும்போது அவை அச்சுப் பிழைகளா? அன்றி அறியாப் பிழைகளா என்று ஐயமுற நேர்கிறது!

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 24:-

"நான்கு கட்டுரை"க்" கொண்ட இந்த நூலில்" என்று ஒரு தொடரைக் கண்ணுற்றேன்.
"கட்டுரைக்கொண்ட" - சொல்லிப் பாருங்கள். இயல்பாக உள்ளதா? இல்லை! ஏன்?
அது "கட்டுரை கொண்ட" என இயல்பாக இருத்தல் வேண்டும்.
நான்கு கட்டுரைகளைக் கொண்ட - என்று வேற்றுமை உருபு விரிந்து வரும்போது வல்லொற்று மிகுதல் தானாகவே ஏற்படுகிறது.

இப்படி மற்றொன்று:-
"ஆழ்"க்"கடல் ஆய்வு செய்யும் குழுவினர்" என்று அறிஞர் ஒருவர் நூலில் படித்தேன். இஃது ஆழ்கடல் ஆய்வு என்று வல்லொற்று மிகாது அமைதல் வேண்டும். இதனை வினைத்தொகை எனலாம்.
- ஆழமாய் இருந்த கடல்
- ஆழமாய் இருக்கும் கடல்
- ஆழமாய்ப் போகும் கடல்
முக்காலத்தும் கடல் ஆழம் உடையதே.
கடல் ஆய்வு பற்றிய நூலில் நாம் சொல்லாய்வு செய்கிறோம்.

"ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி"ப்" பெற்றுள்ளன".
இப்படி ஒரு செய்தி படித்தோம். பாசன வசதி பெற்றுள்ளன என்று ஒற்று நீக்கி எழுதிட வேண்டும். பாசன வசதியைப் பெற்றுள்ளன எனில் சரியாம். வசதியை (ஐ) இரண்டாம் வேற்றுமை உருபு விரி என்று சொல்லுவோம். இவ்விடத்து வல்லொற்று மிகும்.
சற்றே கவனம் போதுமே.

ஒருமை, பன்மை வேறுபடும் நிலைகளை நாம் முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். ஆயினும் மேலும் மேலும் ஒருமை, பன்மைச் சிதைவுகளைப் பார்க்கும்போது மீண்டும் எழுத வேண்டும் எனத் தோன்றுகிறது.

"இந்தியாவின் கவலை"கள்" தெரிவிக்கப்பட்டது" என்று செய்தி படிக்கிறார்கள். கவலைகள் என்று பன்மையில் உள்ளதே, தெரிவிக்கப்பட்டன எனப் பன்மையில் முடிப்போம் என்று ஏன் அவர் உணரவில்லை. சற்றே கவனம் செலுத்தினால் போதுமே.

பேராசிரியர் ஒருவர் தொலைக்காட்சியில் சிலப்பதிகாரம் பற்றி உரையாற்றுகிறார். தமிழில் ஒருமை, பன்மை என்று ஓர் அமைப்பு உண்டு. அதனை இலக்கணம் உரைக்கிறது என்ற நினைவே தோன்றாதா? ஆங்கிலத்தில் ஒருமை, பன்மை கெட வாக்கிய அமைப்புகள் செய்வார்களா?

”சிலப்பதிகாரத்தில் மூன்று காண்டங்கள் உள்ளது. அக்காப்பியத்தில் முப்பது காதைகள் உள்ளது. அதில் மூன்று நீதிகள் சொல்லப்பட்டுள்ளது.”

மூன்று தொடர்களிலும் இப்படித் தவறு செய்கிறாரே! தப்பித் தவறி ஒருமுறையாவது உள்ளன என்று சரியாகச் சொல்லமாட்டாரா என்று மனம் ஏங்குகிறது.

ஓர் இலக்கிய விழா அழைப்பிதழில் பேராசிரியர் ஒருவர் பெயரைத் தவறாக அச்சிட்டிருந்தார்கள். எப்படி?
சிட்சபேசன் என்று.
அவர் பெயர் சித்சபேசன்.
சித்+ சபை+ ஈசன் = சித்சபேசன்.
"சித்" என்பது அறிவு. அறிவாளர் அவைக்குத் தலைவன் அவன். தில்லைப் பொன்னம்பலத்தையே சித்சபை என்போம். அந்த நடராசப் பெருமானே சித்சபேசன். இந்த அருமையான பெயரை இப்படிச் சிதைக்கலாமா?

தனித்தமிழ் நாளேடு ஒன்றில் போனஸ் - "கொடுபடா ஊதியம்" என்று தமிழ்ச்சொல் அளித்திருந்தார்கள். ஊதியப் பாக்கியைத்தான் (அரியர்ஸ்) கொடுபடா ஊதியம் என்று சொல்லுதல் பொருந்தும். போனஸ் என்பது ஆக்கத்தில் (இலாபத்தில்) தரப்படும் பங்குப் பணம். அஃதாவது, ஊதியத்தின் மேல் தரப்படும் "மேலூதியம்" ஆகும். உயர்படிப்புக்காகத் தரப்படும் "இன்சென்டிவ்" என்பதை "ஊக்க ஊதியம்" எனலாம்.

கருத்துச் சிதைவுகள்:-
கண்ணகி கோவலனோடு சில மாதங்களே குடும்பம் நடத்தினாள் என்று ஒருவர் பேசக் கேட்டேன். சில மாதங்கள் அன்று; சில ஆண்டுகள் கண்ணகி கோவலனோடு அன்புற்று, இன்புற்று வாழ்ந்தாள் என்று சிலப்பதிகாரம் சொல்கிறது. "தனிமனை வாழ்க்கையில் யாண்டு சில கழிந்தன கண்ணகி தனக்கு", என்பார் இளங்கோவடிகள்.
உலகின் நிலையாமையை உணர்ந்து எல்லா இன்பமும் இப்போது துய்த்திட வேண்டும் என்பது போல் இன்பம் துய்த்தார்களாம்.

"கருத்து யுத்த"மாம்; இப்படி ஒரு பேச்சு நிகழ்ச்சி. ஏன்?
கருத்துப் போர் எனில் யாருக்கும் புரியாதோ?
போரைவிட யுத்தம் பெரிது என்று கருதினார்களோ?
நல்ல தமிழிருக்க யுத்தத்தில் நாட்டம் ஏனோ?

இது போகட்டும்.
நாம் எழுத நினைத்தது வேறு ஒன்று. அது நிகழ்வில் பேசிய ஒருவர் சொல்லிய கருத்து.
அவர் சொன்னார்:-
"அரண்மனைக்கு வந்த சோதிடன் ஒருவன் இளங்கோ அரசனாவார், அவர் தம்பிக்கு அரசாட்சி இல்லை என்றபோது, இளங்கோ தம்பி அரசாளட்டும் என்று சொல்லித் துறவியானார்''. கதையையே மாற்றிவிட்டார். மூத்தவன் இருக்க இளையவன் அரசனாவான் என்றான் சோதிடன். இளங்கோவுக்கே அரசு வீற்றிருக்கும் திருப்பொறி உண்டென்றான். அண்ணன் செங்குட்டுவன் மனம் நோகும் என்பதால், அப்போதே அரண்மனை விட்டகன்று துறவு மேற்கொண்டார் என்பது வரலாறு..

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 25:-


இரவு மணி எட்டு:-
தன் பேச்சைத் தொடங்கிய பேச்சாளர் "இந்த இனிய மாலை நேரத்தில்" என்று தொடங்கினார்.
உடனே, இல்லை மாலை நேரம் போய்விட்டது. இப்போது இரவாயிற்று என மாற்றினார்.
உண்மையில் பத்துமணி வரை மாலை என்பதுதான் தமிழர் வகுத்துள்ள கணக்கு.
- காலை (மணி 6 - 10)
- நண்பகல் (10 - 2)
- எற்பாடு (2 - 6)
- மாலை (6 - 10)
- யாமம் (10 - 2)
- வைகறை (2 - 6)
என்பவை ஒரு நாளின் ஆறு சிறு பொழுதுகள்.

(எல்- கதிரவன், படுதல்- சாயுதல்), இளவேனில் (சித்திரை, வைகாசி) முதுவேனில் (ஆனி, ஆடி) முன்பனி (மார்கழி, தை), பின்பனி (மாசி, பங்குனி) என்பவை ஓராண்டின் ஆறு பருவங்கள். (கார் - மழை, கூதிர் - குளிர்)

"சமுதாயச் சிக்கல்களும் சித்தர் ஆய்வுத் தீர்வைகளும்" எனும் தலைப்பில் ஒரு நூல் நமது மதிப்புரைக்காக அனுப்பப்பட்டு வந்திருந்தது. இந்தப் புத்தகத்தின் தலைப்பு நம்மைத் திகைக்க வைத்தது. நீளமாக இருப்பதால் அன்று. ஆய்வு தீர்வை எனும் சொல் கண்டு மலைத்தோம்.

ஆயத் தீர்வை நாம் அறிந்ததுண்டு. இஃது என்ன ஆய்வுத் தீர்வை? ஆய்வுத் தீர்வுகள் எனும் சொல்லைத் தீர்வைகள் (நிலவரி) ஆக்கியமை எத்துணை பெரிய தவறு!

நூல்கள் பதிப்பாளர் கூட்டத்தில் உரையாற்றிய பொது நூலகத்துறை இயக்குநரை ---பொதுநலத்துறை இயக்குநர் என்று ஒரு நாளிதழ் அச்சிட்டிருந்தது. சில எழுத்துகள் மாறி அச்சுப் பிழை நேர்ந்திருக்கலாம். ஆனால் எவ்வளவு பெரிய பொருள் வேறுபாடு?
நூலகத்துறையை நலத்துறையாக ஆக்கிவிட்டதே!
ஆங்கிலப் பத்திரிகைகளில் இப்படி வந்திருந்தால் ஆசிரியர்க்குக் கடிதம் எழுதி கிழி, கிழி என்று கிழித்திருக்கமாட்டார்களா?

பத்து ஆண்டுகள் முன் ஒரு வார ஏட்டில் ஒரு கவிதை படித்தேன்.
அதில் "அக்கினிப் பிரவேசம் அயோத்தியில் நடந்தது" என்று ஒரு வரி. இராமன் இராவணனைக் கொன்ற பின், சீதையை அழைத்துக் கொண்டு ஊர் திரும்பும் முன்பு, சீதை அப்பழுக்கற்றவள் எனக் காட்டத் தீக்குளிக்கச் சொன்னான். அந்த அக்கினிப் பிரவேசம் இலங்கையில் நடைபெற்றது. இவரோ அயோத்தியில் என்று எழுதியுள்ளார். அரைகுறையாய் அறிந்த செய்தி கொண்டு மோனை அழகுக்காக இப்படி எழுதினாரோ!

தஞ்சை மாவட்டத்தில் ஓடும் தனியார் பேருந்து ஒன்றில், "பஸ் நின்ற பின் இரங்கவும்" என்று எழுதியிருக்கிறார்கள். "ஐயோ இந்த ஓட்டைப் பேருந்தில் பயணம் செய்தோமே" என்று தன்னிரக்கம் கொள்ள வேண்டியதுதான்.

இதுமட்டுமன்று; "டிரைவருக்கு இடையூராகப் பேசாதீர்" என்று ஓர் அறிவிப்பு எழுதப்பட்டிருந்தது. பட்டுக்கோட்டையில் ஏறினால் தஞ்சாவூரில்தான் இறங்க வேண்டும் போலும். இடையில் உள்ள ஊர்கள் பற்றிப் பேசக் கூடாதாம். தமிழ் எப்படி விளையாடுகிறது!
"தொகையும் விரியும்" - வேற்றுமை உருபு விரிந்து வரும்போது என்று எழுதியுள்ளீர்கள்?

விரிந்து வருதல் என்றால் என்ன என ஓர் அன்பர் வினவினார்.
- தொகை எனில் தொகுத்து வருதல் (மறைந்து வருதல்)
- விரி எனில் விரிந்து வருதல் (வெளிப்படையாக வருதல்) மறைந்தும் வெளிப்படையாகவும் வரும் என்றால் விளங்கவில்லையே! எவை அப்படி வரும்?
வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை என ஐந்து.
இவற்றின் உருவுகள் மறைந்துவந்தால், வேற்றுமைத் தொகை, வினைத் தொகை, பண்புத் தொகை, உவமைத் தொகை, உம்மைத் தொகை என்பர் இலக்கண நூலார்.

"வீடு சென்றான்" எனில் வீட்டிற்குச் சென்றான் எனப் பொருள்.
இதில் "கு" எனும் நான்காம் வேற்றுமை உருபு மறைந்துள்ளதால் இது வேற்றுமைத் தொகையாம்.

வீடு சென்றான் என்பதை வீட்டிற்குச் சென்றான் என எழுதும்போது இது வேற்றுமை விளி.

எரிந்த, எரிகின்ற, எரியும் தழல் எரிதழல் - இது வினைத் தொகை.
நேற்றும் எரிந்த தழல்; இன்று எரிகின்ற தழல், நாளை எரியும் தழல் என முக்காலமும் உணர்த்தும்.

எரிகின்ற தழலில் எண்ணெய் ஊற்றினாற் போல - எரிகின்ற என்பதில் காலம் வெளிப்படை. இது தொகையாகாது.

செந்தாமரை - இதனைச் செம்மை ஆகிய தாமரை என விரித்தல் வேண்டும். செம்மை என்பது பண்பு (நிறம்) ஆகிய எனும் உருபு மறைந்திருப்பதால் பண்புத் தொகையாம்.

கபில பரணர் வந்தார்.
இது கபிலரும், பரணரும் வந்தார்கள் என்று விரியும்.
உம் எனும் இடைச் சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை.
"உம்" வெளிப்பட்டு நின்றால் அது விரி.

புலிப் பாய்ச்சல் புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள் தரும்.
போன்ற எனும் உவமை உரு, மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை.

தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை..

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 26:-

புலிப்பாய்ச்சல் - புலியைப் போன்ற பாய்ச்சல் என்று பொருள்தரும். போன்ற எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் இது உவமைத் தொகை.

தாமரை முகம் எனில் தாமரை போன்ற முகம் எனும் உவமை உருபு மறைந்திருப்பதால் உவமைத் தொகை.
பெயரை வேறுபடுத்திக் கொண்டிருப்பது வேற்றுமை.
ஒரு வாக்கியத்தில் உள்ள எழுவாய் (பெயர்) வேறுபடாத நிலையில் முதல் வேற்றுமை.
(எடுத்துக் காட்டு) முருகன் வந்தான்.
- இரண்டாம் வேற்றுமை - முருகனை வணங்கினான் (ஐ)
- மூன்றாம் வேற்றுமை - முருகனால் முடியும் (ஆல்)
- நான்காம் வேற்றுமை - முருகனுக்குக் கொடு (கு)
- ஐந்தாம் வேற்றுமை - முருகனின் வேறு (இன்) (பிரித்தல் பொருள்)
- ஆறாம் வேற்றுமை - முருகனது வேல் (அது) உடைமைப் பொருள் - ஏழாம் வேற்றுமை - முருகனிடம் சென்றான் (இடம்)
- எட்டாம் வேற்றுமை - முருகா வா - விளித்தல்

இரண்டு முதல் ஏழு வரையிலான வேற்றுமைகளுக்கு உருபுகள் உண்டு. அவை மறைதலே வேற்றுமைத் தொகை.
எந்த வேற்றுமை உருபு மறைந்துள்ளதோ, அதனைச் சொல்லிக் (நான்காம் வேற்றுமைத் தொகை என்பதுபோல்) குறிப்பிடல் வேண்டும்.

வினைத் தொகையில் காலம் மறைந்து வரும்.
உவமைத் தொகையில் உவம உருபுகள் மறைந்து வரும்.
போல, போன்ற, ஒத்த, நிகர்த்த, புரைய, ஒப்ப, அனைய - ஏதாகினும் ஓர் உருபு மறைந்து வரலாம்.

பண்புத் தொகையில் "மை" எனும் விகுதியும் "ஆகிய" எனும் உருபும் மறைந்திருக்கும். "உம்" எனும் இடைச்சொல் மறைந்திருப்பது உம்மைத் தொகை. இந்த ஐந்து தொகைகளின் வழியாக இவற்றுள் அடங்காத மற்றொரு சொல் மறைந்திருப்பது அன்மொழித் தொகை எனப்படும். அல் + மொழி + தொகை (அல்லாத சொல் மறைதல்)

எ-டு:- தேன்மொழி வந்தாள் - தேன் போன்ற சொல் பேசும் பெண் வந்தாள் - உவமைத் தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை. (தேன்மொழி எனும் பெயருடைய பெண் வந்தாள்) பெண் எனும் சொல் ஈண்டு அன்மொழி.
பைந்தொடி கேளாய் - பசிய (பச்சைநிற) வளையல் அணிந்த பெண்ணே கேள் (பெண் அன்மொழி)

இப்போதைக்கு இதுபோதும், இலக்கணச் சுமையை ஏற்றுதல் நம் நோக்கமன்று.

துவக்கமா? தொடக்கமா?
ஊராட்சி துவக்கப்பள்ளி, விழாவைத் துவக்கி வைத்தார் என்று பார்க்கிறோம், கேட்கிறோம். தொடக்கப்பள்ளி, தொடங்கி வைத்தார் என்றும் காண்கிறோம். எது சரி?

தொடு - தொட - தொடக்கு - தொடங்கு என்று பார்த்தால், ஒன்றைத் தொடங்கும்போது கைகளால் தொட்டு அல்லது சொற்களால் தொட்டுத்தானே ஆக வேண்டும். ஆதலின் தொடக்கம், தொடங்கினார் என்பன சரியான சொற்கள்.
(தொடு - (பள்ளம்) தோண்டு; தொட்டு - (பள்ளம்) தோண்டி எனும் பொருள் உண்டு.)
துவ - துவக்கு என்று பார்த்தால் "துவ" என்பதன் பொருள் ஒன்றுமில்லை. துவள் எனும் பகுதி உண்டு.
இது துவளுதல் - துவண்டு போதல் ஆகும்.
ஆதலின் துவக்கினார் என்பதும், துவக்கப்பள்ளி என்பதும் பிழையெனத் தோன்றவில்லையா?

அறிக்கை - அறிவிக்கை
இவ்விரண்டு சொற்களும் வெவ்வேறு பொருள் கொண்டவை.
அரசியல் தலைவர்கள் அறிக்கை விடுக்கிறார்கள். ஓர் ஆய்வுக் குழு தமது பரிந்துரை அல்லது தீர்ப்பை அறிக்கையாக வெளியிடுகிறது. ஆதலின் ஆங்கிலத்தின் ரிப்போர்ட் என்பதை அறிக்கை எனலாம்.

அரசு அவ்வப்போது சில செய்திகளை மக்களுக்கு அறிவிக்கிறது.
நிறுவனங்கள் மக்களுக்கு அறிவிக்கும் செய்திகள் உண்டு.
வங்கிகள் நகைகளுக்கு ஏலமிடுதல்பற்றி அறிவிப்புச் செய்கிறது.
இந்த வகையானவை அறிவிக்கை எனலாம்.
ஆங்கிலத்தில் நோட்டீஸ் (Notice) என்பதுதான் அறிவிக்கை.

தப்பு - தவறு - பிழை
சரியா? தப்பா? என்று பேசுகிறோம்.
சரியா? தவறா? என்று வினவுகிறோம்.
தப்புத் தவறு செய்ததில்லை என்று சொல்கிறார்கள்.
தப்பித் தவறியும் கெட்ட வார்த்தை பேசமாட்டேன் என்பார் சிலர்.
தப்பும் தவறும் உடன் பிறந்தவை. ஒரே பொருள் கொண்டவை.
ஆனால் "தப்பு"வில் தப்பித்தல் எனும் பொருள் அடங்கிக் கிடக்கிறது.
உங்கள் கருத்து தவறு என்று சொல்கிறோம். தவறான செய்தி என்கிறோம். தவறு செய்தால் தண்டிக்கப்படுவார்கள் என்று எழுதுகிறோம். ஆகத் தப்பு என்பதனினும் தவறு அழுத்தம் உடையதாக அறிகிறோம். அறியாமல் செய்வது தப்பு என்றும், அறிந்தே செய்வது தவறு என்றும் சொல்வாருளர்..

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 27:-

பிழை என்பது சந்திப் பிழை, எழுத்துப் பிழை, சொற்பிழை, சொற்றொடர்ப் பிழை (வாக்கியப் பிழை) என்றெல்லாம் தமிழாசிரியர்கள் வழக்கில் மிகுதியாகப் பயன்படும் சொற்கள்.

"பிழையின்றித் தமிழ் பேசு" என்பதா? "தவறின்றித் தமிழ் பேசு" என்பதா? எது சரி?
இரண்டும் சரிதாம்.
இல்லை, தவறின்றி எனல் தவறு. மொழியைப் பொறுத்துப் பிழை என்று சொல்லுதலே சரி என்பார் உளர்.
ஐயா, பிழையைத் தவறு எனல் பொருந்தாது என்கிறீர். பிழையைக் குற்றம் என்றே இலக்கணம் சொல்லுகிறதே.
சொற்குற்றம், பொருட்குற்றம் என்றெல்லாம் சொல்லுகிறார்களே.
நூலில் வரக்கூடாதவற்றைப் பத்துக் குற்றங்கள் என்று நன்னூல் பேசுகிறதே.
"குன்றக் கூறல், மிகைப்படக் கூறல், கூறியது கூறல், மாறுபடக் கூறல்" முதலியன குற்றங்களாம்.
ஆதலின் கொலை, களவு போன்றவைதாம் குற்றங்கள் எனக் கருதுவது நமது மனப்பான்மையாகும்.
"தப்பு"வில் தப்பித்தல் பொருளும் உண்டாதல் போல, பிழை என்பதில் பிழைத்தல் எனும் பொருள் உண்டாகும்.
தப்பிப் பிழைத்தேன் என்றும் சொல்லுவோம். பிழைத்தல் என்றால் தவறு செய்தல் என்ற பொருளும் உண்டே.
சான்றோர்ப் பிழைத்தல் என்றால் சால்புடைய பெரியார்க்குத் தவறிழைத்தல் என்று பொருள்.
(உயிர் பிழைத்தல் வேறு. உயிர் வாழ்தல் வேறு என்று விளக்கம் பல தருவோம். இதுவேறு)
முடிவாக பிழை, தவறு, குற்றம் எல்லாம் ஒரே பொருள் தருவன எனினும் இடமறிந்து
தக்கவாறு பயன்படுத்துதல் வேண்டும் என அறிக.
என்ன ஒரே குழப்பமா? ஊன்றிப் படியுங்கள். தெளிவு பிறக்கும்.

வன்னம் - வண்ணம்:-
இரு சொற்களுக்கும் நிறம், அழகு எனும் பொருள் உண்டு.
இருப்பினும் நிறத்தைக் குறிக்க நாம் வண்ணம் எனும் சொல்லையே பயன்படுத்துகிறோம்.
இரண்டிற்கும் வேறுபாடான பொருளும் உண்டு.
"வன்னம்" எனில் எழுத்து.
"வண்ணம்" எனில் இசைப்பாட்டு வகை என்று இருவேறு பொருள் காணலாம்.
இவ்வண்ணம், இவ்வாறாக என்ற பொருளிலும் பயன்பாட்டில் உள்ளது.
இராமபிரானின் கைவண்ணம், கால் வண்ணம் பற்றியெல்லாம் கம்பன் பாட்டில் கண்டு மகிழலாமே.
வன்மை - வண்மை = வன்மை என்பது வலிமையாகும்.
உடல் வன்மை வேண்டும் என்போம். சொல்வன்மை, அனைத்து வன்மையிலும் உயர்ந்தது என்று சொல்லுவோம்.
வன்மை, வலிமை, வல்லமை எல்லாம் ஒன்றே.
வல்லரசு நாடுகள் என்றால் போர் வன்மை மிக்க நாடுகள் எனப் பொருளன்றோ?
வண்மை என்பது வளத்தைக் குறிப்பது. வழங்குதலையும் குறிக்கும்.
அஃதாவது வள்ளல் தன்மை வண்மை எனப்படும்.
"வறுமையின்மையால் வண்மையில்லை கோசலத்தில்" என்பான் கம்பன். (வண்மையில்லை நேர் வறுமையின்மையால்)
வன்மையும், வண்மையும் உடையதாக ஒருநாடு திகழுமாயின் அது நன்னாடு ஆகும்.

கன்னன் - கண்ணன்:-
இரண்டும் இருவரது பெயர்கள்.
- முன்னவன் கர்ணன்,
- பின்னவன் கிருஷ்ணன்.
தமிழ் ஒலியமைப்பில் எழுத்து வடிவில் கர்ணன் = கன்னன் எனவும், கிருஷ்ணன் = கண்ணன் எனவும் ஆயினர்.
ஆக்கியவர் வில்லிபுத்தூரார். இப்படியாக்கிட வழியுரைத்தவர் தொல்காப்பியர்.
"வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇஎழுத்தொடு புணர்ந்த சொல்லாகும்மே''.
- கர்ணம் என்பது காதைக்குறிக்கும் வடசொல்.
- கிருஷ்ணம் என்பது கருமை குறித்த வடசொல்.

பத்துமணி செய்தியா? பத்துமணிச் செய்தியா?:-
பத்து மணிக்கு ஒளிபரப்பாகும் செய்தி, பத்துமணி செய்தி என்று வல்லொற்றுமிகாமல் இயல்பாகச் சொல்லுதலே சரி.
பத்து மணிச் செய்தி என்றால் "மணியான செய்தி பத்து" என்று பொருள் மயக்கத்திற்கு இடமாகும். (மணிச் செய்தி - மணியான செய்தி)
மணிச்செய்திகள் என்றால் மணி, மணியான செய்திகளன்றோ? மற்றொன்று இந்த நிகழ்ச்சி இரவு பத்து முப்பது மணிக்கு என்று சொல்லுகிறார்களே!
இது சரியா? சரியன்று.
பத்து முப்பது மணி (10:30) - மணி என்றால் பத்து மணிக்கா, முப்பது மணிக்கா? மணி என்னும் சொல், பத்தோடும், முப்பதோடும் இயைவு கொள்ளுமே!
பின்,எப்படிச் சொல்லுவது?
இரவு மணி பத்து முப்பதிற்கு (10:30) எனலாம். இதற்குப் பத்துமணி முப்பது நிமிடத்திற்கு என்று பொருள் கொள்ளலாகும்.

மறுதேர்வு, மறுத்தேர்வு:-
ஒரு முறை தேர்வு நடத்தி அதில் ஏதோ தவறு நேர்ந்து மீண்டும் அத்தேர்வு நடத்தப்படுவதை மறுதேர்வு எனல் வேண்டும்.
ஆனால், சில பத்திரிகைகள் மறுத்தேர்வு நடைபெற்றது என எழுதுகின்றன. மறுத்தேர்வு என்றால் மறு (மாசு - குற்றம்) உடைய தேர்வு என்று பொருள் தரும். ஆதலின் ஒற்றுப் போட்டு அழுத்த வேண்டாம்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 28:-


நோயற்ற வாழ்வு வாழ்வதற்கான வழிமுறைகள் சொல்லப்பட்டன என்ற செய்தியை ஒரு பத்திரிகை நோயுற்ற வாழ்வு வாழ்வதற்கான என்று அச்சிட்டிருந்தது. ஓர் எழுத்து மாற்றம் எவ்வளவு பெரிய பொருள் மாற்றத்தைத் தருகிறது என உணர்வோமா?
(அற்ற - இல்லாத; உற்ற- பெற்ற) எப்போதும் நோய் அற்றவராகவே இருப்போம்.

வெகுளிப் பெண்
கள்ளம், கபடம் அறியாத சூது, வாது தெரியாத (அப்பாவிப்) பெண்ணை வெகுளிப் பெண் என்று சொல்லி வருகிறோம்.
பெண்ணை மட்டுமன்று, "அவனா... சுத்த வெகுளிப்பய; ஒரு மண்ணுந் தெரியாது" என்று ஆண் பிள்ளையையும் சுட்டுவதுண்டு. ஆக வெகுளி என்றால், உலக நடப்பு அறியாத நல்லது, கெட்டது தெரியாத தன்மை என்று கருதுகிறோம். உண்மையில், வெகுளி என்பதற்குச் சினம் (கோபம்) என்பதுதான் பொருள்.

"குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது"
ஆகக் "கோபக்காரியை" "அப்பாவி" ஆக்கிவிட்டோம். அப் பாவி என ஆக்காமல் விட்டோமே!

குண்டுமணி:-
காட்டுச் செடி ஒன்றின் விதையைக் குண்டுமணி என்கிறோம்.
பெருமளவு சிவப்பும், கொஞ்சம் கறுப்பும் உடையது அது.
"ஒரு குண்டுமணி" தங்கம் கூட வீட்டில் இல்லை என்பார்கள்.
பொன் அளவையில் குண்டுமணியை எடை கணக்கிடப் பயன்படுத்தியதுண்டு.
குண்டு மணி என்று உடல் மிகக் குண்டாக இருக்கும் ஒரு நடிகருக்குப் பெயருண்டு.
முன் சொன்ன குண்டு மணி என்ற சொல் சரியானதா?
இல்லை. அதன் பெயர் குன்றிமணி.

திருக்குறளில் பல இடங்களில் குன்றியெனும் சொல் குன்றி மணியைச் சுட்டுவதாக வந்துள்ளது.
"புறங்குன்றி கண்டனையரேனும் அகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து"
என்பது ஒரு குறள்.

குன்றிமணியின் சிகப்பைப் போல் வெளித் தோற்றத்தில் செம்மையுடையவராகவும், அகத்தில் (மனத்தில்) குன்றி மணி மூக்கைப்போல் கரியர் (கறுப்பு எண்ணம் உடையவர்) ஆகவும் இருப்பவர் (போலித் துறவியர்) உலகில் உளர் என்பது இக்குறட் கருத்து.

"கேவரு" தெரியுமா உங்களுக்கு?
அதுதான் கேவரகு.
இச்சொல்லி இடைக்குறையுள்ளது.
அஃதாவது கேழ்வரகு என்னும் சொல்லில் இடையில் உள்ள "ழ்" எனும் எழுத்துக் குறைந்துவிட்டது.
சரியாகச் சொன்னால் கேழ்வரகு எனும் சிறு தானியம் இது.
உடலுக்கு நல்ல ஊட்டம் தருவது.
என்ன தமிழோ இது?

"வெள்ள நிவாரணமாக ஒவ்வொருவர்க்கும் தலா ரூ.1,000 வழங்கப்பட்டது" என்று செய்தி படித்தார்கள்.
தலா என்பதன் பொருள் தலைக்கு என்பதாம். இது தலையுடைய மனிதரைக் குறிக்கும்.
தலைக்கு ஆயிரம் ரூபா என்றாலும் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபா என்றாலும் பொருள் ஒன்றே.
ஒவ்வொருவர்க்கும் எனச் சொன்னால் தலா வேண்டாம்.
தலா போட்டால் ஒவ்வொருவர்க்கும் எனல் வேண்டாம்.

கல்வி கண் போன்றது; கல்விக் கண் கொடுத்த கடவுள் - இவ்விரண்டு தொடரும் பிழையற்றவை.
ஆனால் ஒரு புத்தகத்தில் கல்விக் கண் போன்றது என்றும், ஒரு சிற்றிதழில் கல்வி கண் கொடுத்த கடவுள் என்றும் படிக்க நேர்ந்தபோது என்ன தமிழோ இது? என்று மனம் வருந்தினேன்.
கல்வியானது மனிதருக்குக் கண்ணைப் போன்றது என்பது முதல் தொடரில் பொருள்.
கல்வியாகிய கண்ணைக் கொடுத்த கடவுள் இரண்டாம் தொடரின் பொருள்.
கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்தும்போது கல்விக்கண் (வல்லொற்று) மிகுதல்
சரியாம்..
உருவகம் என்றால் கல்வி வேறு கண் வேறு இல்லை.
கல்வியே கண்ணாம் என்று கல்வியைக் கண்ணாக உருவகப்படுத்துதல்.
கல்வி கண் போன்றது எனும் போது கல்வியானது கண்ணைப் போன்றது எனக் கல்விக்குக் கண்ணை உவமை சொல்கிறோம்.
இயல்பாக இருக்க வேண்டிய இடத்தில் வல்லொற்றுப் போட்டால், கல்விக் கண் என்று உருவகமாகிவிடுகிறது.
பின் போன்றது எனும் சொல்லுக்குப் பொருளில்லாமல் போகும்.
இஃதன்றி, மற்றொரு தொடரில், கல்வி கண் கொடுத்த என்றிருப்பது கல்வியும், கண்ணும் கொடுத்த என்று வேறு பொருள் உருவாக்கிடும்.
ஆதலின் கல்விக் கண் கொடுத்த என்று எழுதுதல் முறையாம்.
எங்கே எப்படி இந்த ஒற்றெழுத்துகளைப் போடுவது என அறிய நல்லறிஞர்களின் நூல்களைப் படிக்க வேண்டும்.

பிறமொழிக் கலப்பு:-
தமிழர் தம் எழுத்திலும், பேச்சிலும் இந்நாளில் மிகுதியாகக் கலந்துள்ள மொழி ஆங்கிலம்.
முதலில் தமிழில் கலந்த பிறமொழி, சமக்கிருதம் எனும் வடமொழியே.
அளவிறந்த வடசொற்கள் தமிழில் கலந்த போது அதற்கு இலக்கணம் வரையறுத்தது தொல்காப்பியம்.
வடமொழிச் சொற்களைத் தமிழின் இயல்புக்கேற்ப ஒலித்திரிபு செய்து வடவெழுத்துகளை விலக்கித் தமிழாக்கிக் கொள்வதே அந்நெறி.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 29:-


சமக்கிருதம் அல்லாது பல்வேறு மொழிகள் காலந்தோறும் தமிழில் வந்து கலந்தன. அராபிய, பாரசீக, இந்துஸ்தானிச் சொற்களும், போர்ச்சுக்கீசியச் சொற்களும், உருது, தெலுங்கு, கன்னடச் சொற்களும் தமிழில் கலந்துள்ளன. ஆங்கில மொழிச் சொற்கள் மிகுதியாகத் தமிழில் கலந்து இந்நாளில் ஆதிக்கம் (மேலாண்மை) செய்கின்றன.

இப்போதெல்லாம், நமஸ்காரம், ஸந்தோஷம், சுபமுகூர்த்தப் பத்திரிகை, வந்தனோபசாரம், ஷேமம், அக்கிராசனர், காரியதரிசி, பொக்கிஷதாரர், பாஷை போன்ற சொற்களைப் பயன்படுத்துவோர் தமிழகத்தில் குறைவாகவே உள்ளனர்.

இவற்றை நல்ல தமிழில் வணக்கம், மகிழ்ச்சி, திருமண அழைப்பு, நன்றி நவிலல், நலம், தலைவர், செயலாளர், பொருளாளர், மொழி என்று சொல்லுதல் பெருகியுள்ளது. மிகச் சிலரே நமஸ்காரம், ஸந்தோஷம் என்பனவற்றை விடாமல் பிடித்துக் கொண்டுள்ளனர்.
ஆனால், இதற்கு இணையாக - இன்னும் மேலாக ஆங்கிலச் சொற்கலப்பு அன்றாடம் தமிழர் வாழ்வில் நிகழ்கிறது.

காலையில் குட்மார்னிங், மாலையில் குட் ஈவினிங், இரவில் குட் நைட் என்பதோடு, லஞ்ச், டின்னர், டிபன், தாங்ஸ், சாரி, வெரி நைஸ், சூப்பர், ஓகே ஓகே, மம்மி, டாடி, அங்கிள், ஆன்ட்டி, ஷோ, நியூஸ்,ரைஸ், ஃபிரை, மட்டன், ஃபிஷ் இப்படி எத்தனை எத்தனையோ!

யாரும் முழுமையாகத் தமிழில் பேசுவதில்லை.
ஒருவர் தம் தங்கையின் திருமண அழைப்பைக் கொடுக்கிறார்.
"சார் நம்ப சிஸ்டர் மேரேஜ் தஞ்சாவூர்ல கம்மிங் ஃபிரைடே நடக்குது சார், நீங்க ஷியூரா வந்துடணும்''!
இப்படிச் சொல்லி அழைக்கிறார்.

இன்னொருவர் பேசுகிறார்:-
"டியர் ஃபிரண்ட்ஸ், உங்களுக்கெல்லாம் ஒரு குட் நியூஸ். எனக்கு பெங்களூர்ல நல்ல ஜாப் கிடைச்சிருக்கு, வர்ற மண்டே ஜாயின்ட் பண்றேன். அதுக்காக டுடே ஈவினிங் உங்களுக்கெல்லாம் மேரீஸ் ஓட்டல்லே ட்ரீட் கொடுக்கறேன், மிஸ் பண்ணாம வந்திடுங்க"!
இப்படித்தான் நம் தமிழர் வாழ்வு ஓடிக் கொண்டிருக்கிறது. இன்னொரு வகைப் பேச்சும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்டது. அது ஒருவகையான தமிழ். பண்ணித் தமிழ்! சினவாதீர்! சிரிக்காதீர்! இதோ கேளுங்கள்:
"நாம வாக் பண்ணி, அந்தப் பார்க்கிலே மீட் பண்ணி, அதப்பத்தி திங் பண்ணி அவனுக்காக கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணி, அப்படியே போய் ஓட்டல்ல டிபன் பண்ணி, ரூமுக்குப் போய் லைட்டை ஆஃப் பண்ணி, ஃபேனை ஆன் பண்ணி... ''
இப்படி எத்தனை பண்ணிகளை இணைத்து நாம் தமிழ் பேசுகிறோம்... எண்ணிப் பார்த்ததுண்டா?

நமது தொலைக்காட்சிகளில் பல நேரங்களில் கீழ்வருமாறு வருணனையாளர் பேசுவதைக் கேட்கிறோமே.
"ஹலோ வியூவர்ஸ் குட் ஈவினிங்... இந்தப் புரொகிராம் வெரி நியூ. ரொம்பப் புதுசு.. நீங்கள்லாம் நல்லா எஞ்சாய்ப் பண்ணணும் ஜாலியா இருக்கணும். அதான் எங்க எய்ம்ம்... அதுக்காக ரொம்ப ரிச்சா, ரிஸ்க் எடுத்துப் பண்ணிருக்கோம்... நீங்க இதிலே பார்ட்டிசிபேட் பண்ணணுமா? எங்களுக்கு டயல் பண்ணுங்க. னைன் எய்ட் த்ரி ஒன் ஜீரோ ஃபோர் சிக்ஸ் எய்ட்.'' இப்படித்தான் ஊடகங்களில் தமிழ் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நம்மில் பலரும் தமிழ்ச் சொல் என்று கருதுகின்ற பிறமொழிச் சொற்கள் பலவுண்டு. அவை ஏராளமாகத் தமிழில் கலந்துள்ளன. ஈண்டு ஏராளமாக என்ற சொல் உள்ளதே அது தெலுங்குச் சொல். அதற்குத் தமிழ் ”மிகுதியாக” என்பதே.

எல்லாம் கச்சிதமாக அமைந்துவிட்டன என்று சொல்லுகிறோம். "கச்சிதம்" தெலுங்குச் சொல். இதற்கு ஒழுங்கு என்பதே பொருள்.
கெட்டியாகப் பிடித்துக் கொள் என்பதில் "கெட்டி"யாக எனும் சொல் தமிழில்லை என்று யாராவது நினைப்பார்களா?
அதுவும் தெலுங்கே. அதன் பொருள் " உறுதி"யாக.

"அக்கடா" என்று கிட என்று சொல்லுகிறோமே. இந்த அக்கடா என்பது கன்னடச் சொல். இதற்கு "வாளா இருத்தல்" என்பதே தமிழ்.

"தராசு" என்பதற்கு துலாக்கோல் என்போம். தராசு எந்த மொழிச் சொல்? பாரசீகச் சொல் இது.

"தயார்" என்பதைத் தமிழில் ஆயத்தம் எனலாம். தயார் என்பதும் பாரசீகச் சொல்லே.

"மைதானம்" என்பது அரபிச் சொல். திடல் என்பது தமிழ்.
விலை ரொம்ப "ஜாஸ்தி" என்பதும் அரபிச் சொல்லே. மிகுதி என்பது தமிழ்.

அறைகூவல் எனும் பொருளுடைய "சவால்" என்பதும் அராபியே.
"பஜார்" என்பது கடைத்தெரு என்போம். இந்தப் பஜார் இந்துஸ்தானி.
"மிட்டா மிராசு" (நிலக்கிழார்) இந்துஸ்தானிச் சொற்களே.
"முலாம்" (மேற்பூச்சு) அராபியச் சொல்.
"மாமூல்" என்பதும் அராபி. பழைய வழக்கப்படி என்று தமிழில் சொல்லலாம்.
இப்போதெல்லாம் தயிர்ச்சோற்றைக் கூடத் தமிழில் நாம் சொல்லுவதில்லை. பகாளாபாத் என்கிறோம். "பாத்" எனில் சோறு.
பகாளபாத் - இந்துஸ்தானிச் சொல். (இந்தி வேறு, இந்துஸ்தானி வேறு)
- அலமாரி (பேழை)
- சாவி (திறவுகோல்)
- ஜன்னல் (காலதர்- காற்று வழி)
- பாதிரி (கிறித்துவத் தொண்டர்)
இவை போர்த்துக்கீசியச் சொற்கள்.

- நிம்மதி (கவலையின்மை)
- சரக்கு (வணிகப் பொருள்)
- தொந்தரவு(தொல்லை)
- வாடகை (குடிக்கூலி)
- எச்சரிக்கை (விழிப்பாயிரு)
எல்லாம் தெலுங்குச் சொற்கள்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 30:-


நாம் மறந்துவிட்ட தமிழை, மறக்காத தமிழர்கள்!
தாய்த் தமிழ்நாட்டு மக்களைவிட, ஈழத் தமிழர்களும், மலேசியத் தமிழர்களும் நல்ல தமிழ் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அவர்களின் உரையாடல்களில் ஆங்கிலக் கலப்பு நம்மைவிடக் குறைவாகவே உள்ளது.

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் உலகம் முழுதும் பரவியுள்ளார்கள். அவர்களின் தமிழ் ஒலிப்பு முறை சற்றே வேறுபட்டிருக்கும். அதனால் நமக்குச் சில சொற்கள் புரிந்து கொள்ள இயலாமல் இருக்கலாம். ஆயினும் கூடிய வரை அவர்கள் தமிழில் "கதை"க்கிறார்கள்.

இருநூறு, முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டிலிருந்து மலை நாட்டிற்கு (மலாயா) வேலை தேடிச் சென்றவர்களின் வழித் தோன்றல்கள் - மூன்றாம், நான்காம் தலைமுறையினர் மலேசியாவில் வாழ்ந்து வருகிறார்கள். தோட்டம், தொழில், வணிகம், அலுவல் சார்ந்த அனைத்து நிலைகளிலும் நல்ல வண்ணம் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டுத் தமிழர்கள் மறந்துவிட்ட தமிழை மறக்காமல் இருக்கும் அம்மக்கள் பாராட்டிற்குரியவர்கள்.
மொழியை மட்டுமன்று, நமது விருந்தோம்பல், ஒப்புரவு, இனிய பேச்சு, கடவுள் வழிபாடு முதலிய பண்பாட்டுக் கூறுகளையும் போற்றிக் காத்து வருகிறார்கள்.
"ஐயா பசியாறிட்டீங்களா?'' என்று உசாவும் குரல் மலையகத் தமிழர் குரலாகத்தான் இருக்கும். (தமிழ்நாட்டு முசுலிம் மக்களிடமும் இத்தொடர் வழக்கில் உள்ளது) நாம் என்றால், "என்ன சார் டிபன் ஆயிடிச்சா?" என்போம்.

சோறு என்று சொல்லுவதற்கே வெட்கப்படுபவர் நம் மக்கள்!
சோற்றைச் சாதம் என்போம். அதுவும் போய் இப்போது எங்கும் "ரைஸ்" வந்துவிட்டது. உணவு விடுதியில் நாம் ரைஸ் கொண்டு வா என்று சொல்ல, அரைகுறை ஆங்கிலம் அறிந்த ஆள் அரிசியைக் கொண்டு வந்து கொட்டினால் நாம் சினம் கொள்ள முடியாது.
மலேசியத் தமிழர்கள் இப்போதும் சோறு என்றுதான் சொல்லுகிறார்கள்.

தேநீர், காப்பி, குளிர்பானம் எல்லாம் அங்கே தண்ணீர்தான். முதலில் "தண்ணி என்ன வேண்டும்?" என்றுதான் வினவுகிறார்கள்.
நம்மூரில் உணவு பரிமாறுபவரை "ஹலோ" என்று கூவி அழைப்போம். அல்லது "மிஸ்டர்" என்போம். வேறு சிலர், "வெயிட்டர்" இங்கே வாப்பா என்பார்கள். ஆனால் மலேசிய மக்கள் உணவு விடுதிகளில் பணி செய்பவர்களை அண்ணன் என்றோ அக்கா என்றோ அழைக்கிறார்கள். (மேசை துடைத்தல் போன்ற பணிகளை மகளிர் செய்கிறார்கள்) "வணக்கம் நலமாக இருக்கிறீர்களா?" என்று ஒருவரையொருவர் நலம் கேட்பதும், தொலைபேசியில் அழைத்தால் ”வணக்கம், ஐயா வெளியில் சென்றுள்ளார்கள். இரவுதான் வருவார்கள், நாளை காலையில் பேச இயலுமா?" என்று வீட்டில் உள்ளவர்கள் பேசுவதும் மகிழ்ச்சியாக இருக்கின்றன.

"சாரு எங்கியோ மீட்டிங்னு போயிருக்கார், நைட்டுதான் வருவார், காலையிலே கூப்புடுங்க" இப்படித்தான் நம்மூர்ப் பேச்சு இருக்கும். நாம் சந்திக்கும் உரையாடும் வட்டம் தமிழ் வட்டமாக இருப்பதால், தமிழ் ஆர்வலர்கள் இப்படி இருக்கலாம். பொதுமக்கள் எல்லாரும் இப்படிப் பேசமாட்டார்கள் என்று கருதக்கூடும். ஆனால் உண்மையில் எல்லா இடங்களிலும் மிகுதியாக ஆங்கிலக் கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

சில மலாய் மொழிச் சொற்கள் மிகக் குறைவான அளவில் அவர்கள் பேச்சில் கலந்து வருகின்றன. நம் செவிக்கு எட்டியவரை, நகரம், சிற்றூர், ஆலயம், வணிக வளாகம் எவ்விடத்தும் மக்கள் ஆங்கிலச் சொற்கலப்பு இல்லாமல் பேசுகிறார்கள்.

மலாய் மொழிக்கென்று தனி எழுத்துவடிவம் இல்லை. வெறும் பேச்சுமொழிதான். மலாய் மொழிச் சொற்களை ஆங்கில எழுத்துகளில்தான் எழுதி வைத்துள்ளார்கள். எழுத்து வடிவம் இல்லாத அம்மொழி அந்நாட்டின் ஆட்சி மொழி. மலேசிய மக்களில் மலாய் இனத்தவரையடுத்துச் சீனர்கள் மிகுதியாக வாழ்கிறார்கள். அதனை அடுத்த நிலையில் இந்தியர். அவருள் பெரும்பான்மையர் தமிழர்.

சீனர்கள் ஒருவரோடு ஒருவர் சீனமொழியில்தான் பேசுகிறார்கள்.
இந்தியருள் தமிழர்களை அடுத்துச் சீக்கியர் (பஞ்சாபியர்), தெலுங்கர் இருக்கிறார்கள். அவர்களிடம் காணப்படும் ஒற்றுமை நம் தமிழரிடையே இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
அங்கும் நம் தமிழர்கள் புத்துணர்வு கொள்ள வேண்டிய நிலையில் உள்ளனர்.