நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 61-65


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்

கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 61:-

இரண்டு சொற்களில் ஏற்படும் விகாரங்கள் பற்றி மட்டும் காண்போம்.

மூன்று + நூறு= முந்நூறு (முன்னூறு - பிழை)

மூன்று எனும் நிலைமொழியில் இறுதி "று" வும் இடையில் "ன்"னும் கெட்டு, "மூ" எனும் நெடில் "மு" எனக் குறுகி, திரிந்து, மு + நூறு = முந்நூறு (ந் - தோன்றல் விதி) என்றாயிற்று. இச்சொல்லில் கெடல், திரிதல், தோன்றல் மூன்று இடம் பெற்றுள்ளன.

ஐந்து + நூறு = ஐந்நூறு என எழுதிட வேண்டும்.

இறுதி (து) கெட்டு "ந்" - உம் கெட்டு, நூறு சேரும்போது மீண்டும் "ந்" தோன்றி ஐந்நூறு ஆகிற்று.

ஐநூறு எனில் பிழை.

"உலக அறிவுச் சார்ந்த கேள்விகளுக்குச் சரியான விடை தருபவர்க்குப் பரிசு உண்டு".

இது தொலைக்காட்சியில் எழுதப்பட்டு வந்த வாக்கியம்.

அறிவுச் சார்ந்த - என்பதில் "ச்" வல்லொற்று வரக் கூடாது. அறிவு சார்ந்த என்று இயல்பாக இருத்தல் வேண்டும். அறிவுசார்ந்த எனில் அறிவைச் சார்ந்த எனப் பொருள்.

இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்திருக்கும்போது ஒற்று மிகாது. அவ்வுருபு வெளிப்பட்டிருப்பின் (வேற்றுமை விரி) ஒற்றுமிகும்.

"திங்கள் முதள் வெள்ளி வரை நிகழ்ச்சியைக் காணத் தவறாதீர்கள்" இது பெண்மணி ஒருவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி பற்றி அறிவித்த வாக்கியம். சொற்றொடரில் பிழை இல்லை. உச்சரிப்பில் (ஒலிப்பில்) பிழை.

முதல் என்னும் சொல்லை முதள் என்று லகரத்தை ளகரமாக உச்சரித்தார். திங்கள், வெள்ளி ளகரம் இருப்பதால், இந்த இடர்ப்பாடு ஏற்பட்டிருக்கலாம்.
நா நெகிழ் பயிற்சிகள் சிலவற்றால் இக்குறையைப் போக்க முடியும். முயற்சி வேண்டும்.

தூக்குத் தண்டனையா? தூக்கு தண்டனையா?

அண்ணாத்துரை என்னும் பெயருக்குச் சொன்ன விளக்கம்தான் இதற்கும். அஃதென்ன?

"த" வை என்று அழுத்தி வல்லொலியில் சொன்னால் "த்" வரும். "த" வை என மெல்லோசையில் "த்" வராது.

தண்டனை என்பது தமிழ்க்குரிய ஒலி. த என்பது வடசொல் உச்சரிப்பு. ஆயின் தண்டனை தமிழ்ச் சொல்லா? வட சொல்லா?

சாம, பேத, தான, தண்டம் - இவை வடசொற்கள்.

தண்டாயுதபாணி (தண்டு எனும் கருவியைக் கையிற் கொண்ட முருகன்) வடமொழிப் பெயர். தண்டம் - ஒறுத்தலையும் (தண்டித்தல்) தண்டு (ஆயுதத்தையும்) குறிக்கின்றன.

தமிழிலும் இந்தத் தண்டு இருக்கிறது. தாமரைத் தண்டு, வாழைத் தண்டு, முதுகுத் தண்டு, தண்டுவடம் என்பன எல்லாம் தமிழ் சொற்களே.

"பணத்தை வசூல் செய்தார்கள்" என்று பேசுகிறோம். வசூல் என்பதைச் சில பகுதிகளில் பணம் தண்டுதல் என்று சொல்லுகிறார்கள். நெல்லையில் பணம் பிரித்தல் (பறித்தல்) என்றும் சொல்லுவார்கள். வசூல் தமிழன்று.

தண்டு என்பதற்குச் சேனை (படை) என்ற பொருளும் உண்டு. கலிங்கத்துப் பரணியில் காண்க. ஒரு செலவு வீணான செலவு என்றால் தண்டச் செலவு என்கிறோம். உருப்படாத ஒருவனை "தண்டம், தண்டம்" என்று திட்டுகிறோம்.

தண்டனை ஒறுத்தல் என்னும் பொருளுடைய வடசொல்லாயினும் தமிழ் ஓலியில் தண்டனை என்று ஒலித்தால், தூக்குத் தண்டனை பொருத்தமானது. கீரைத் தண்டு, வாழைத் தண்டு எல்லாம் தமிழ்ச் சொற்களே. இங்கே தண்டினை - தண்டு ஆக்க வேண்டாம்.

பாடாத தேனீ, வாடாத மலர், கேளாத காது - இவையெல்லாம் எவை?

எதற்காக இந்த எடுத்துக் காட்டுகள்?

பாடாத் தேனீ, வாடா மலர், கேளாக் காது - இவற்றையும் பாருங்கள்.

இரண்டு வகை எடுத்துக் காட்டுகளிலும் எதிர்மறைப் பொருளில் (பாடாத, கேளாத) வந்துள்ளன. முற்றுப் பெறாத எச்சமாக நின்று தேனீ, மலர் , காது என்னும் சொற்களால் முற்றுப் பெற்றுள்ளன.

முன்னர் உள்ளவை எதிர்மறைப் பெயரெச்சம். அடுத்து உள்ளவை ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். எப்படி? விளக்கம் என்ன?

பார்ப்போமே.


ஒரு முற்றுப் பெறாத வினைச் சொல் (எச்சவினை) ஒரு பெயர்ச் சொல் கொண்டு முடிந்தால் அது பெயரெச்சம்.

(எ-டு) ஓடிய குதிரை, வந்த பையன்இத்தகைய பெயரெச்சம் எதிர்மறை வினை பெற்று வரின் எதிர்மறைப் பெயரெச்சம்.

(எ-டு) உலவாத தென்றல், கேளாத காது.இதில் உலவாத என்னும் வினைச் சொல்லைச் சற்றே மாற்றி உலவா என்று சொல்லுதலும் உண்டு.

ஈற்று (கடைசி) எழுத்து இல்லாமையால் இது ஈறு கெட்ட வினை. எப்படி முடிக்கலாம்?

உலவாத் தென்றல், கேளாக்காது. இவை ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள்.முதலில் பெயரெச்சம் - புரிந்து கொள்ளுங்கள்.

அடுத்து எதிர்மறைப் பெயரெச்சம்.

பின்னர் ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். விளங்கிற்றா?

இல்லையெனில் விட்டுவிடுங்கள்.

மீண்டும் அடுத்த நாள் பொறுமையாகப் படித்துப் பாருங்கள். புரியும்.


பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்

கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 62:-

வாபஸ் - இதற்கு தமிழ்ச் சொல் என்ன?

"உண்ணாவிரதம் வாபஸ்' என்று செய்தித்தாளில் படிக்கிறோம். இது சரிதானா? வாபஸ் என்பது திரும்பப் பெறுதல். ஒருவர் ஒரு விண்ணப்பம் அளிக்கிறார். பின் வேண்டாம் என்று அதனைத் திரும்பப் பெறுகிறார். இது வாபஸ். உண்ணாவிரதத்தை - பட்டினி கிடந்ததைத் திரும்பப் பெற முடியுமா? இனி உண்ணாவிரதம் இல்லை என்பதுதானே நிலை! ஆதலின் உண்ணாவிரதம் நிறுத்தப்பட்டது அல்லது நிறுத்தம் என்று எழுதுதல் பொருந்தும். விரதம், தமிழ்ச் சொல் அன்று. அதனால் உண்ணாநிலை என்று சிலர் சொல்கிறார்கள். நோன்பு தூய தமிழ்ச் சொல்லாயிற்றே. உண்ணா நோன்பு என்று உரைக்கலாமே! நோன்ட, நோற்றல் - தமிழ்ச் சொற்கள்.

சொல்லாட்சிக் குறைபாடுகள்:
சிலநாட்களுக்கு முன் காலமான "அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன் பரிமளம்...' என்று ஒரு தொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். இச்சொற்றொடரில் சொற்கள் ஆளப்பட்டுள்ள முறைமை சரியா?

சில நாட்களுக்கு முன் காலமானவர் பரிமளம்; இவர் அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகன். ஆனால் அறிஞர் அண்ணா சிலநாட்கள் முன் காலமானவர் என்பது போன்ற செய்தியைத் தரும் இத் தொடரமைப்பு பிழை. பின்னர் எப்படி இவ்வாக்கியத்தை அமைக்கலாம்?

"அறிஞர் அண்ணாவின் வளர்ப்பு மகனும் சில நாட்கள் முன்னர் காலமானவரும் ஆன பரிமளம்...'' என்று தெளிவாக எழுதலாமே!

பேச்சு வழக்கிலுள்ள சில சொற்களை நாம் இந்நாளில் பிழையாக - கொச்சையாகக் கருதுகிறோம். எடுத்துக்காட்டாக "அந்தப் பொம்பளை செய்த வேலை' எனும் தொடரில் பொம்பளை என்னும் சொல் ஒருவரை அவமதிப்பதாகக் கருதுகிறோம். அந்த அம்மா என்றோ,அந்தப் பெண்மணி என்றோ சொன்னால், யாரும் சினம் கொள்வதில்லை (யாரய்யா பெண்மணி, அம்மா என்றெல்லாம் சொல்லுகிறார்கள். எல்லாரும் மேடம்தான். அதுவும் போய் "மேம்'). பொம்பளை என்றால் திட்டுவதாகக் கொள்ளுகிறார்கள்.

பெண் பிள்ளை என்னும் சொல்தான் பொம்பளை என்று மருவிற்று. ஆண்பிள்ளை ஆம்பளை ஆயிற்று. ஆண்பிள்ளை, பெண்பிள்ளை என்றுரைத்தால் யாரும் சினம் கொள்ளார். "பொம்பளே' என்று சொன்னால் போதும், "அது எப்படி என்னை அந்தப் பொம்பளைன்னு சொல்லலாம்' என்று எவரும் வம்புக்கு வருவார்கள். ஆனால், "அவன் ஆம்பளைடா' என்றால் யாரும் சினம் கொள்ளுவது இல்லை. மாறாக, ஆம்பளை என்று குறிப்பிட்டால் பெருமையாகவே கருதுகிறார்கள். (சரியான ஆம்பளைடா அவன்!)

ஒரு நிகழ்ச்சிக்கு வருதல் குறித்தோ, ஒரு செயலைச் செய்து முடிப்பது குறித்தோ பேசும்போது, பலர் கண்டிப்பாக எனும் சொல்லை ஆளுகிறார்கள். இது "ஷியூர்' என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நிகரானது என்று கருதிச் சொல்லப்படுகிறது.

ஒருமை,பன்மை மயக்கங்கள்:
"காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியது' இப்படி ஒரு செய்தி. அது எப்படி இப்படி ஒரு தவறு அடிக்கடி நிகழ்கிறது? ஆங்கிலச் செய்தி இப்படி வருமா? தேர்வுகள் தொடங்கின என்றுதானே சொல்ல வேண்டும்?

"சிக்கிமில் பூகம்பத்தால் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்தது' என்று செய்தி படிக்கிறார்கள். வீடுகள் இடிந்து விழுந்தன என்று சொல்ல வேண்டும் என்ற எண்ணமே இல்லை. சிறிய சிறிய தவறுகள்தாம்; இவற்றைக் கூட திருத்திக் கொள்ள மனமில்லையே.

"என் வாழ்க்கையில் எனக்குக் கிடைத்த வெற்றி, திருப்புமுனைகள் எல்லாமே அவரால்தான் கிடைத்தது'

இப்படி ஒரு வாக்கியத்தைப் படிக்க நேர்ந்தது. எல்லாமே என்ற பன்மைக்கேற்ப, கிடைத்தன என்று பன்மையில் முடிக்க வேண்டும். அவரால்தாம் கிடைத்தன என்று எழுதினால் இன்னம் சரி. (அவர்தாம் - அவன்தான்)

ஒருமை பன்மை மாறிவர வாக்கியம் அமைப்பதுபோல் மற்றொரு பிழை ஒற்றெழுத்து விட்டுவிடுதலாகும்.

"சத்தியம் என்பது இவ்வுலகில் கடைப்பிடிக்க வேண்டியது' இத்தொடரில் கடைப்பிடிக்க வேண்டியது என்று வல்லொற்று (ப்) வர வேண்டும். கடைப் பிடிக்க என்றால் ஒரு கடையை (நட்ர்ல்) குடிக்கூலிக்கு (வாடகைக்குப்) பிடிக்க என்று பொருள்.

வாக்கிய அமைப்பில் தெளிவு இருத்தல் வேண்டும். ஓரிதழில் நாம் படித்ததொரு வாக்கியம்:

"நமக்கு எதையெல்லாம் பிறர் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் நாம் பிறருக்கும் செய்யக் கூடாது''

இச்சொற்றொடரை "எவையெல்லாம் பிறர் நமக்குச் செய்யக் கூடாது என்று நினைக்கிறோமோ அவையெல்லாம் பிறர்க்கு நாம் செய்யக் கூடாது' என்று மாற்றிப் பாருங்கள். ஒரு தெளிவு இருக்கும். (எவற்றையெல்லாம் - அவற்றையெல்லாம் என்று எழுதினால் இலக்கணம் பிறழாது; ஆனால் கடினமாகத் தோன்றும்.)                    
 பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 63:-
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

காலாவதியாகிவிட்டது
என்பதைக் காலம் முடிந்துவிட்டது
என்று கூறலாமே?

யாப்பு இலக்கணக் குறிப்புகளும் ஒன்றிரண்டு அவ்வப்போது எழுதி வருகிறோம். முழுமையாக எழுத வேண்டும் என அன்பர் சிலர் வேண்டுகோள் விடுக்கின்றார்கள். அப்படி விளக்கமாக எழுதினால் இத்தொடர், இலக்கண வகுப்பாக மாறிவிடும். ஆனாலும் சில செய்திகளைச் சொல்லாமல் விட இயலவில்லை.

வெண்பா எழுதுவது மிகவும் கடினம். அப்பழுக்கில்லாத இலக்கணம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஒரு சிற்றிதழில் சிறந்த வெண்பா எனத் தேர்வு பெற்ற ஒன்றில்,
சமையத்திற் கேற்பச் சமைத்தே - நமது
இமயத்தைச் சாய்த்தார்....
என்பதைக் கண்ணுற்றோம். இதில் நமது எனும் தனிச் சொல்லில் "து' வருவதைப் பொருள் விளங்க நமது இமயத்தை எனப் பிரித்துள்ளார். நம+து (த் + உ) இமயத்தை (த்+இ=தி) நமதிமயத்தை (உயிர் வரின் உக்குறள் மெய்விட்டோடும்).
"நம' என்ற தனிச்சொல் ஓரசையாகும் (நிரை). ஓரசை, வெண்பாவின் இறுதியில் வரலாம் (அசைச்சீர்) இங்கே தனிச்சொல் ஓரசையாக நின்று யாப்பு சிதைவுற்றது. தளை தட்டிவிட்டது. இவ்வெண்பா பிழையான வெண்பாவாம். "நமதாம்' என்று தனிச் சொல்லை மாற்றிவிட்டால் யாப்பு சரியாகும்.

தமிழில் பிறமொழியை அளவின்றிக் கலந்து பேசுவதும் எழுதுவதும் பிழையன்றோ? அதனால்தான் நாம் பல இடங்களில் கலப்படக் கொடுமைகளைச் சாடி வருகிறோம்.

ஒரு தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் முக்கியப்புள்ளி ஒருவர் சொன்னார்: ""நான் சமீபத்துல பாத்துண்டு வந்ததுல ஒன் எய்ட்டியைவிட ஒரு ரிச்சான மூவி இல்லை'' எப்படி இருக்கிறது தமிழ்? நூற்றெண்பது (180) என்னும் தமிழ்ப்பட பெயரைக் கூட ஒன் எய்ட்டி ஆக்கிவிட்டார். இப்படித்தான் இன்று பலர் பேசுகிறார்கள். ஐம்பது, நூறு ஆண்டுகளில் பின் தமிழ் எப்படியிருக்குமோ? (இழுக்குமோ?)

முதலில் நம் வீட்டுக் குழந்தைகள் தமிழில் பேசுகிறார்களா? எப்படிப் பேசுகிறார்கள்? நாம் கவனிக்க வேண்டாமா? இவர்கள்தாமே நாளைய குடிமக்கள் - தமிழர்கள்.

நம் அருமை வாய்ந்த தமிழ்ப் பெயர்களையே குழந்தைகள் மறந்துவிட்டார்களே. வாழைப்பழம் - தெரியாது; பனானா - தெரியும். மாம்பழம் தெரியாது; மேங்கோ தெரியும். வேப்பிலை தெரியாது, நீம் தெரியும். சந்தனம் தெரியாது, சாண்டல் தெரியும். ஞாயிற்றுக்கிழமை தெரியாது; சண்டே தெரியும். மாலை ஐந்து மணி தெரியாது - ஈவினிங் ஃபைவ் ஓ கிளாக் தெரியும். இவ்வளவு ஏன்? நம் வீட்டுச் சோற்றையும் ரைஸ் ஆக்கிப் பழக்கிவிட்டோமே!
தயிர்ச்சோறு - கர்டு ரைசாம்; இன்னும் லைம் ரைஸ், ஒயிட் ரைஸ் என்றுதானே பழக்கப்படுத்தியுள்ளோம். உணவு விடுதியில் பரிமாறுபவர் கூட அப்படித்தானே சொல்லுகிறார். இந்த நிலை மாறுமா? ஏக்கப் பெருமூச்சுதான் விடையா? 

தூய தமிழ்ச் சொற்கள்:
நம் மக்களின் பேச்சு வழக்கில் பயன்பட்டு வரும் தூய தமிழ்ச் சொற்களை நினைவு கூர்வோம். இவற்றின் பயன்பாடு புதிதாகச் சிலருக்குப் பயன்படும்.
பரிதி, ஞாயிறு (சூரியன்), ஞாலம், உலகம் (லோகம்),
கருவூலம் (பொக்கிஷம்), கருவறை - (கர்ப்பக்கிருகம்), இழப்பு (நஷ்டம்), ஆக்கம் (இலாபம்), ஊதியம் - (சம்பளம்),
ஆகூழ் - (அதிர்ஷ்டம்), போகூழ் - (துரதிர்ஷ்டம்)
இவற்றுள் இலாபத்தை ஆக்கம் என்றது எவ்வாறெனில்
"ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை
ஊக்கார் அறிவுடை யார்'
என்னும் திருக்குறளின் துணை கொண்டேயாம்.

"இலாபத்தைக் கருதி போட்ட முதலை இழந்துவிடும் செயலை அறிவுடையார் ஊக்கப்படுத்தமாட்டார்' என்பது இதன் பொருள்.

ஆகூழ், போகூழ் என்பனவும் திருக்குறளில் இருந்து எடுத்தவையே.
"ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்றும் மடி'

தமிழ்ச் சொல்லாகவே நாம் வழங்கும் சில சொற்கள் சரியாக அமையாது இருக்கின்றன. "உடம்பு இப்ப எப்படியிருக்கு?' (நலமா?)

இதற்கு, "தேவலாம்' என்று பதில் சொல்லுகிறோம்.

தாழ்வில்லை அல்லது தாழ்விலை என்று பதில் சொன்னால் பொருள் பொருந்துகிறது. தாழ்விலை என்றால் குறைந்த விலை என்றும் பொருள் கொள்ள இடமுண்டு. அதனால் "தாழ்வில்லை' என்றே சொல்வோமே.

"பரவாயில்லை' என்பது மற்றொரு சொல். (இதை ஒரு பாடகர் பருவாயில்லை என்று பாடினார்) இதன் பொருள் என்ன? "படம் எப்படி இருக்கிறது? என்றால், "பரவாயில்லை' என்று பதில் வருகிறது. இச்சொல்லுக்கு, ஏற்கலாம் என்றோ, தாழ்வில்லை என்றோ சொல்லலாமே!

நிச்சயம் என்பதை உறுதியாக என்றுரைக்கலாம். மருந்து காலாவதியாகிவிட்டது என்பதைக் காலம் முடிந்துவிட்டது என்று கூறலாமே? "எக்ஸ்பியரி' என்பதைக் காலமுடிவு எனலாம்..                                                       பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி -64:-                                                   டென்மார்க் நாட்டை இடென்மார்க் என்று எழுதுதல் சரியா?

புதியன புகுதல்
"பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினானே'
நன்னூல் நூற்பா (சூத்திரம்) ஆதலின் மொழி இலக்கணக் கட்டுப்பாடுகளிலும் காலத்திற்கேற்ப சில பழைய விதிகளைத் தளர்த்தியும், புதியவற்றை ஏற்றதும் உண்டு என அறிக.

மொழி முதலாக வரும் எழுத்துகள் பற்றித் தொடரின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டுள்ளோம். ட, ர, ல எழுத்துக்களை முதல் எழுத்தாகக் கொண்ட தமிழ்ச் சொல் இல்லை. ஆனால் பிறமொழிச் சொற்களை எப்படி எழுதுவது? அரங்கசாமி, இராமன், இலக்குவன், உலோபி என்று அ, இ, உ - க்களை முதலில் இணைத்து வழங்குவது தமிழில் வழக்கம்.

டங்கன் துரை என்ற பெயரை இடங்கன் துரை எனலாமா? எல்லீஸ் ஆர். டங்கன் என்ற திரைப்பட இயக்குநர் ஒருவரின் பெயரை எல்லீஸ். ஆர். இடங்கன் என எழுதலாமா? டென்மார்க் எனும் நாட்டை இடென்மார்க் என்று எழுதுதல் சரியா? டயர் என்பான் பெயரை இடயர் எனலாமா?

"ர' விலும் அப்படியே; ரப்பர் எனும் ஆங்கிலச் சொல்லை இரப்பர் என்று எழுதுதல் சரியா? இரப்பர் என்ற தமிழ்ச் சொல் (யாசிப்பவர்) உள்ளதே. ரம்பம் என்பதை இரம்பம் என்றெழுதலாமா? ரவை, ரவா(உணவுப்பொருள்) இதனை இரவை, இரவா என்றெழுதினால் வேறு பொருள் தரும் தமிழ்ச் சொல் ஆகிறதே!
லம்பாடி, லப்பை எனும் சொற்களை இலம்பாடி, இலப்பை எனல் சரியா? லட்டு - இலட்டுவா? சிந்தித்தால் பிறமொழிச் சொற்களில் இம்மூன்றையும் முதலெழுத்துகளாக ஏற்பதில் தவறில்லை எனத் தோன்றுகிறது.

மொழி முதல் எழுத்துப் பட்டியலில் "ங' இடம் பெற்றுள்ளது. "ங' இப்போது எந்தச் சொல்லில் மொழி முதல் எழுத்தாக வருகிறது? அங்ஙனம், இங்ஙனம் என அ, இ சேர்த்து வழங்குகிறோம்.

"ஞ'கர வரிசையிலும் ஞ, ஞா, ஞி, ஞெ, ஞொ இந்த ஐந்து மட்டுமே பழைய காலத்திலும் மொழி முதல் எழுத்தாக வந்துள்ளன.

(எ-டு) ஞமலி (நாய்), ஞாலம் (உலகம்), ஞிமிறு (வண்டு), ஞெகிழி (கொள்ளிக்கட்டை), ஞொள்கல் (இளைத்தல்). ஆயினும் "ஞ' மொழி முதலில் வாராது என விட்டுவிடல் தவறு. ஞாலம், ஞமலி போன்ற அருஞ்சொற்களை இழக்க நேரிடும்.
அதனால், முடிவாக நாம் மொழி முதல் எழுத்தாக வருவன பற்றி எழுதுகிறோம். மனத்திற் கொள்க.

உயிரெழுத்துகள் பன்னிரண்டும் (அ முதல் ஒü முடிய) சொல்லின் முதல் எழுத்தாக வரும். (அம்மா, ஆடு, இலை, ஈட்டி எனக் கண்டு கொள்க).

மெய்யெழுத்துகள் பதினெட்டும் மொழி முதல் வாரா என முன்னரே அறிவீர்கள். உயிர் மெய் எழுத்துகளில், க, ச, ஞ, ட, த, ந, ப, ம, ய, ர, ல, வ என்னும் பன்னிரண்டும் இவற்றின் பெருக்கமும் (வர்க்கமும்) (க, கா, கி, கீ, கு, கூ எனத் தொடர்ந்து வருவன) எனத் தெளிக. ட வையும் ஏ வையும் ல வையும் இவர் எப்படிச் சேர்க்கலாம் என எம்மீது எவரும் சீற்றம் கொள்ள வேண்டாம். தமிழ்ப் பேரறிஞர் அ.கி.பரந்தாமனார் அவர்களே ஐம்பதாண்டுகள் முன்னர் எழுதியுள்ளார்கள்.

இவை இருக்கட்டும். இப்போது புதிதாகச் சென்னையில் இளைஞர்கள் இடையே உரையாடலில் மிகுதியாக இடம் பெற்றுள்ள சொற்களை எழுதட்டுமா? "அவன்தான்டா ஆட்டயப் போட்டான்' (திருடிவிட்டான் என்று பொருளாம்), "சரியான மொக்கை' (ஒன்றுக்கும் ஆகாதது - உருப்படாதது எனப் பொருளாம்) இந்தத் தமிழ்ச் சொற்களை எவர் கண்டுபிடித்தார்களோ?

"ஜொள் விடுறான்', "லுக் விட்டான்', "ஜோட்டாலடி', "கிராக்கி', "கட்டை' போன்ற பல சொற்கள் இன்று தமிழ்ப் பேச்சு வழக்கில் புழக்கத்தில் உள்ளன. இவ்வழக்குச் சொற்களை எழுத்தில் (நூல்களில்) சேர்த்துவிட்டால் வரப்போகும் நம் வழிமுறை
யினர் (சந்ததியர்) தமிழின் தரத்தைக் குறைத்தே மதிப்பிட வேண்டி வரும். அருள் கூர்ந்து, எழுத்தில் "தவிர்ப்பன தவிர்த்தல்' கடைப்பிடியுங்கள்.

பிழை திருத்தங்கள்:

மருந்து நிறுவனம் ஒன்றின் விளம்பரத்தில் "மூல நோய்க்கு முழு ஆதரவு தரும் மருந்து' என்று ஒரு மருந்தின் பெயரைக் குறிப்பிட்டு விளம்பரம் செய்திருந்தார்கள். மூல நோய்க்கு முழு ஆதரவா? அப்படியானால் மூல நோய் நன்றாக முற்றி வளர இம் மருந்து உதவுமா? அவர்கள் நினைப்பது, "மூல நோயை முற்றிலும் அகற்றிட உதவும்' என்ற பொருள் பற்றித்தான். ஆனால் அதற்கான வாக்கிய அமைப்பு அவர்களுக்குத் தெரியவில்லை.   


        பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்:                                                                          -65 முருங்கைக்காய் தமிழ்ச் சொல்லா?


"மாதராய்ப் பிறந்திடவே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா என்றார் புரட்சிக் கவிஞர் பாரதியார்' என்று ஒரு மருத்துவத் திங்களிதழில் மூலிகை மருத்துவர் எழுதிய கட்டுரையில் படித்தோம். இந்தச் சொற்றொடரில் மூன்று பிழைகள் உள்ளன.

"மங்கையராகப் பிறப்பதற்கே...' என்னும் தொடக்கத்தை மாற்றிவிட்டார். "நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா' என்று கவிதை எழுதியவர் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. கவிஞர் பெயரைப் பாரதியார் என்று மாற்றிவிட்டார். மேலும் புரட்சிக் கவிஞர் என்று பாரதிதாசனார்க்கு உரிய அடைமொழியைச் சேர்த்துவிட்டார். பாட்டு வரியில் பிழை; பாட்டின் ஆசிரியர் பெயரில் பிழை; அவர்தம் அடைமொழி (பட்டம்) யில் பிழை. சரியாக அறிந்து - அறிந்தவரைக் கேட்டு எழுதலாமன்றோ?


"இருப்பிரிவினரிடையே மோதல்' ஒரு பத்திரிகைச் செய்தி. இரு பிரிவினர் என்று இயல்பாதல் வேண்டும். "ப்' போட்டு வலி மிக வேண்டாம். கோடியக்கரையும், கருப்புப் பணமும் மாறாமல் வந்து கொண்டேயுள்ளன. நாம் பலமுறை எழுதிவிட்டோம். இப்போதும் கோடிக்கரை, கறுப்புப்பணம் என்று எழுதுங்கள் என வேண்டுகிறோம்.

கொஞ்சம் (கொஞ்சும்) இலக்கணம்:

காளி கோவில் தெரு; காளிக் கோவில் தெரு - எது சரி? கோ.சு.மணி தெரு; கோ.சு.மணித் தெரு - எது சரி? இரண்டு எடுத்துக்காட்டுகளிலும் முதலில் வருவதே (க் - மிகாமல், த் - மிகாமல்) வருவதே சரி.
ஆறாம் வேற்றுமைத் தொகையில் நிலை மொழி உயர்திணையாய் இருப்பின் வல்லெழுத்து மிகாது.
காளியது கோவில், மணியது (பெயர் கொண்ட) தெரு என்று விரியும் இவை. அது எனும் உருபு, காளி கோவில், மணி தெரு என்பனவற்றுள் மறைந்திருப்பதால் இவை ஆறாம் வேற்றுமைத் தொகைகள். காளி, மணி ஆகிய நிலைமொழிகள் உயர்திணை எனக் காண்க. நிலை மொழி முதலில் வருவது; கோவில், தெரு என்பன வருமொழிகள் (பின்னர் வந்து சேர்வன).

தெருப் பெயராதலின் மணி தெரு என்று விட்டிசைத்தல் சரியே. மணித் தெரு எனில் மணியான (சிறந்த) தெரு என்று வேறு பொருள் உண்டாகக் கூடும்.

நம்பி என்பது ஒருவர் பெயர். அவரது கையை எப்படி நம்பி கை (நம்பியது கை) என்று எழுதிட வேண்டும். நம்பிக்கை என்று எழுதினால் பொருளே மாறுபட்டுப் பிழையாகிவிடும். இவ்வாறே தம்பி தோள் எனில் தம்பியது தோள் எனப் பொருள்படும். தம்பித் தோள் என்றால் பிழை. தம்பித்துரையில் - "த்' வருகிறதே! வலி மிகல்தானே இது? ஆம். வல்லெழுத்து மிகுதல்தான். ஆனால் தம்பி எனும் பெயரும், துரை என்னும் பெயரும் ஒன்றோடொன்று ஒட்டி நிற்பவை. அஃதாவது தம்பியாகிய துரை என்று பொருள். இதனை இருபெயரொட்டுப் பண்புத் தொகை என்பர். இவ்விடத்து வல்லொற்று மிகும் என்பது இலக்கண விதி.


சற்றே சொல்லாய்வோம்:
ஆகாய விமானம் என்னும் சொல் நிரம்ப நம் பயன்பாட்டில் உள்ளது. பேசுகிறோம், செய்தியிதழ்களில் படிக்கிறோம். இதற்குச் சரியான தூய தமிழ்ச் சொல் நம் எல்லார்க்கும் தெரிந்த ஒரு சொல் "வானூர்தி' இருக்கிறதே! இச்சொல்லை ஏன் பயன்படுத்துவதில்லை? வானில் செல்லும் (பறக்கும்) ஊர்தி (வாகனம்). வானூர்தி - பொருள் வெளிப்படையானது.
தமிழர்கள் ஒட்டுநர் இல்லாமல், தானே இயங்கும் வானூர்தியும் கண்டனர் போலும். "வலவன் ஏவா வான ஊர்தி' என்பது சங்கப் பாட்டு வரி. (வலவன் - பைலட்). சிலப்பதிகாரத்தில் வான ஊர்தி வருகிறது, கண்ணகியை வானுலகு அழைத்துச் செல்லுவதற்காக. சிந்தாமணியில் மயில் வடிவில் அமைந்த வானூர்தி - மயிற்பொறி பேசப்படுகிறது. இராவணன் சீதையைக் கவர்ந்து வானூர்தியில் கொண்டு சென்றான் (தமிழ்க் கம்பன் கூற்றுப்படி) என்றும் படித்துள்ளோம். ஆக வானூர்தியைப் பரப்புவோமாக!
தமிழிலுள்ள சில சொற்கள் பிறமொழிச் சொல்லாக இருத்தல் கூடும். முருங்கைக்காய் என்பதை அப்படி யாராவது நினைக்க முடியுமா? தமிழ்நாட்டுக் காய், தூய தமிழ்ப் பெயரே இது என்றுதான் எண்ணுவோம். "முருங்கா' என்னும் சிங்களச் சொல்லே முருங்கை எனத் தமிழில் திரிந்தது என்று "தமிழ் வரலாற்றிலக்கணம்' எனும் நூலில் அ.வேலுப்பிள்ளை எனும் தமிழறிஞர் குறிப்பிட்டுள்ளார்.
நம் தமிழ்நாட்டுக்குரிய முப்பழங்களுள் இரண்டின் தமிழ்ப் பெயரை நம் தமிழ்ப் பிள்ளைகள் மறந்தனரோ? எனும் ஐயம் எழுகிறது. வாழைப் பழத்தைப் "பனானா' என்றும் மாம்பழத்தை "மாங்கோ' என்றும் எங்கும் எப்போதும் இயல்பாகச் சொல்லுகிறார்கள். மாதுளம் பழம் என்பதும், "பொம்மகர்னட்' என்றுதான் பள்ளிப் பிள்ளைகளால் சொல்லப்படுகிறது. எல்லாப் பிள்ளைகளும் ஆங்கில வழியில் படிப்பது காரணம். வீட்டிலாவது பெற்றோர்கள் தமிழ்ப் பெயர்களைச் சொல்லித் தர வேண்டும்.