நல்ல தமிழ் : பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம் 51-60

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 51:-

விருத்தப் பாக்கள் எழுதும்போதும் கவனம் வேண்டும். எண்சீர் விருத்தம்,அறுசீர் விருத்தம் எழுதும்போது (பெரும்பாலும் எழுதப்படுபவை இவை) மேலே ஒரு வரியும் பின் கீழே உள் வாங்கி ஒரு வரியும் எழுதுகிறோம். இரண்டு வரிகளில் எட்டுச் சீர்கள் இருந்தால் எண்சீர் விருத்தம்; ஆறு சீர்கள் இருந்தால் அறுசீர் விருத்தம்.

இவ்விருத்தங்களுக்குக் கட்டளை என்னும் அமைப்பு உண்டு. அது மாறாமல் எழுத வேண்டும்.

காய் - காய் -மா - தேமா என்பது ஒரு கட்டளை.

இரண்டு காய்ச்சீர்கள் அடுத்து ஒரு மாச்சீர் (தேமா, புளிமா இரண்டில் ஒன்று) இறுதியில் தேமா என முடியும் (நேர் நேர்) சீர். இவ்வமைப்பு முதல் வரியில் தொடங்கி இறுதிவரை மாறாமல் இருத்தல் வேண்டும்.

""தடியூன்றும் காந்திக்கேன் அஞ்சு கின்றீர்?
சர்ச்சிலினைக் கேட்டார்கள் அவரும் சொன்னார்''

இவ்விரண்டு வரிகள் (ஓரடி) மேற்காணும் கட்டளையில் அமைந்தவை.

""விண்ணுயரும் தமிழர்தம் நெறிகள் எல்லாம்
வீச்சாக ஆற்றும் நம் மறவர் உறவே''

இவ்விரண்டு வரிகளில் இறுதியில் "உறவே' என்று முடித்திருப்பது பிழை. எட்டுச் சீரில் கட்டளையின்படி நான்காவது சீரும், எட்டாவது சீரும் தேமா வாக மட்டுமே முடிதல் வேண்டும். உறவே- புளிமாச் சீர் (நிரைநேர்)

அறுசீர் விருத்தங்களிலும் இப்படியே மா - மா- காய் எனும் அமைப்பில் மூன்று சீர்களைத் தொடுத்து அதைத் தொடர்ந்து இதே கட்டளையில் எட்டுவரிகளும் அமைத்திட வேண்டும். மூன்றும் மாச்சீர்களாகவும் (மா -மா - மா) அமைக்கலாம். ஆனால் இடையில் கட்டளை மாறக் கூடாது. காய் - மா - தேமா என்று அமைக்கலாம். விளம் - மா -தேமா என்றமைக்கலாம். எதுவாயினும் முதல் வரி தொடங்கி இறுதி வரி வரை கட்டளையை மாற்றிடல் தவறு.

""எந்தையே முருக வேளே (விளம் - மா- தேமா)
இணையடி வணங்கு வேனே'' என்றிருத்தல் சரி.

ஆனால், ""கன்னியர் கயமை நாடகம் ( விளம்-மா-விளம்)
காதலன் வழியே அரங்கேற்றம்'' (விளம் - மா - காய்) என்றவாறு எழுதுதல் பிழையாம் என்றறிக.


வீறுதமிழ்ச் சொற்கள்
முன்னரே "அவதாரம்' என்பதைக் "கீழிறங்குதல்' என்று விளக்கி எழுதியிருந்தோம். பொருள் விளக்கம் எழுதினோமன்றி அதற்கான தூய தமிழ்ச் சொல் அப்போது நாம் காட்டவில்லை. அண்மையில் படித்த நூலொன்றில் அவதாரம் - திருவிறக்கம் எனக் கண்டு மனம் மகிழ்ந்தோம். திருவிறக்கம் அழகிய தமிழன்றோ? சில சொற்களை - ஒலியமைப்பை மாற்றித் தமிழாக்கிக் கொள்ளலாம் என்று முன்னர் எழுதியுள்ளோம். அப்படி ஒரு சொல்: வலுவந்தம். இது பலவந்தம் எனும் சொல்லின் தமிழ் வடிவம். இன்றும் நம் மக்கள் வழக்கில் இச்சொல் - "வலுவந்தம் செய்தார்கள்' என்று பயன்பாட்டில் உள்ளது.

"எனல்' எனும் ஒரு சொல் "என்று சொல்லு' என்றும், "என்று சொல்லாதே' என்றும் இருவேறு பொருள்தரும் அருமை தமிழுக்கே பெருமை.

பயனிலசொல் பாராட்டு வானை மகன்எனல்
மக்கட் பதடி எனல்

மகன் எனல்- மகன் (மனிதன்) என்று சொல்லாதே. பதடி எனல் - பதர் (உள்ளீடு அற்றது) என்று சொல்லு எனல் என்பதை ஒலிக்கும் முறையால் வேறுபாட்டை உணரலாம்.

இருவிரல்களை உரசி ஒலி உண்டாக்குவதை நொடித்தல் என்போம். கண்களை மூடித் திறப்பதை இமைத்தல் என்போம். நொடிப் பொழுது, இமைப் பொழுது என்று இவற்றின் கால அளவைக் குறிப்பிடுகிறோம். ஒரு வினாடி (செகண்ட்) என்பதோ ஒரு நொடி அறுபது நொடி - ஒரு மணித்துளி (நிமிடம்) அறுபது மணித்துளி ஒரு மணி. பழங்காலத்தில் மணிக்கணக்கில்லை. நாழிகை மட்டுமே. பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை. ஒரு நாள் - அறுபது நாழிகை. இரண்டரை நாழிகைப் பொழுது, இப்போதுள்ள ஒரு மணி. காலை மணி பத்தாகும்போது, நாழிகையும் பத்தேயாகும். எப்படி? காலை ஆறு மணிக்கு முதல் நாழிகை தொடக்கம். 10 மணிக்கு இடையில் நான்கு மணி நேரம். நான்கு மணியை இரண்டரையால் பெருக்கினால் (4x 21/2) பத்து வரும். ஆகப் பத்து மணி என்னும் நேரம் அந்த நாளின் பத்தாவது நாழிகையும் ஆகும்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 52:-


வழக்குகளும் தேர்தல்களும் மோதல்களும் அன்றாட வாழ்வில் இடம் பெற்றுவிட்டன. வழக்கு, சிறைப்பிடித்தல், அடுத்த கட்டம் ஜாமீன். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் பிணை சில வழக்குகளில் நஷ்ட ஈடு கேட்கிறார்கள். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் இழப்பீடு. சிலர் போட்டியாளர் இன்றியே தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இதனை "அன்னப்போஸ்ட்' (un opposed) என்போம். இதற்குச் சரியான தமிழ்ச் சொல் எதிரிலி.

நாளிதழ்களில் அடிக்கடி வரும் ஒரு சொல் குளறுபடி. ஒன்றும் புரியாமல் குழப்பங்கள் நிறைந்த ஒரு நிலையை இப்படிச் சொல்கிறோம். (தெளிவில்லாமல் இருப்பது) இச்சொல் பேச்சு வழக்கில் திரிந்த ஒன்று. சரியான சொல் குழறுபாடு. செயற்பாடு போன்றதொரு சொல்லாக்கம் இது. குழப்பம் - ழ தானே?

மருத்துவ விளம்பரங்கள் சிலவற்றில் தலைச்சுற்றல் என்னும் சொல் பார்க்கிறோம். பல சுற்றுகள் (ரவுண்டுகள்) இருக்கும் ஒரு விளையாட்டில் முதல் சுற்றைத் தலைச்சுற்று எனலாம். ஆனால் இங்கு அந்தப் பொருளில் வரவில்லையே. உங்களுக்குத் தலைச்சுற்றல் இருக்கிறதா? நாங்கள் தீர்த்து வைக்கிறோம் என்பது விளம்பரம். அதாவது தலை சுற்றுகிறதா? மயக்கம் வரும்போல் இருக்கிறதா? என்பதே இதன் பொருள். சில சிக்கல்கள் வரும் போது, "அப்பா ஒன்றுமே புரியவில்லை, தலைசுற்றும் போல் இருக்கிறதே' என்பதும் கேட்டிருக்கிறோம். ஆகத் தலைசுற்று என்பதை தலைச்சுற்று ஆக்க வேண்டாம்; அது பிழை.

என்னதான் சொல்லுவதோ?

"நீங்கள் கேட்டவை', "தேன்கிண்ணம்', "சான்றோர் வீதி' என்றெல்லாம் பார்த்துக் கேட்டவர்கள் நாம். இப்போது கூட, "காலைத்தென்றல்', "வணக்கம் தமிழகம்', "நமது விருந்தினர்', "சந்தித்தவேளையில்' போன்றவை வந்துகொண்டுதான் உள்ளன. ஆனால் இவை குறைவே. தொலைக்காட்சி ஊடகத்தார் உரையாடல்கள், வருணனைகள் எல்லாம் முக்கால் ஆங்கிலம் ஆகிவிட்டதை முன்னரே எழுதினோம். படபடவென விரைந்து பேசி அடித்து நொறுக்கிவிடுகிறார்கள்.

நிகழ்ச்சிகளின் தலைப்பிலாவது தமிழ் உள்ளதா? "கிங்ஸ் ஞச் காமெடி', "Beach Girlz'' இப்படிச் சில தலைப்புகள். எழுத்திலும் தமிழ் ஆங்கிலம் இரண்டையும் கலப்பதில் என்ன மகிழ்ச்சியோ? ஆங்கில எழுத்தில் கூடப் புரட்சி செய்கிறார்கள்; ள் க்குப் பதில் க்ஷ் போட்டு! எல்லாம் புதுமை என்னும் பெயரால் நடக்கும் மொழிச் சீரழிவு.

"சூப்பர் சிங்கர்' Just Dance, "ஹோம் ஸ்வீட் ஹோம்' என்றெல்லாம் (இன்னும் பலப்பல) ஆங்கிலத் தலைப்புகளை அள்ளி விடுகிறார்கள். ஆங்கில வார்த்தை, தமிழ் எழுத்தில் அல்லது ஆங்கிலத்திலேயே. தமிழ்நாட்டில், தமிழ் மக்களுக்கு நடத்தப்படும் நிகழ்ச்சிகள் இவை. தமிழர்கள்தாம் பெரிய மனம் கொண்டவராயிற்றே. மொழித் தூய்மை பற்றிப் பேசினால் "சின்னபுத்தி' என்பார்கள்.

தமிழுக்காக - தமிழ் பற்றியே நடக்கும் விவாதங்களில் கருத்துப் போர்களிலாவது தமிழ் முழுமையாகச் சரியாக இடம் பெறுகிறதா? அங்கும் தமிழ்ச் சிதைவுகள் - ஆங்கிலக் கலப்பு உரையாடல்கள். ஆங்கிலம் சார்ந்த பின்புலம். விளம்பரம் ஆங்கிலத்தில். விளக்கம் ஆங்கிலத்தில். ஆப்பக்கடை விளம்பரம் கூட ஆங்கிலத்தில்தான் செய்யப்படுகிறது. உண்ண வருபவர்கள் தமிழே அறியாதவர்கள் அல்லவா? அதனால்தான். அழகான தமிழ்ப் பெயரை வைத்துக் கொண்டு அதையும் ஆங்கிலத்தில் எழுதி மகிழும் தமிழர்கள் இருக்கிறார்கள். தமிழரசன் - தமிழ் நம்பி - திருமாறன் போன்ற பெயர்களையும் Tamilarasan, Tamilnambi, Tirumaran என்று எழுதுகிறார்கள்.

கையொப்பம் இடுகிறார்கள். இந்தக் கொடுமை மாற்றப்பட வேண்டாமா? கந்தசாமிக்குப் பிறந்த நல்ல தம்பி, க.நல்லதம்பி என்றுதானே கையொப்பமிட வேண்டும்? ஏன் கே.நல்லதம்பி ஆகிறார்? எப்படி வந்தது இந்தப் பழக்கம்? இதை முற்றிலும் களைந்திட வேண்டாமா?

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 54:-

ஆயகலை, தூய தமிழ் அண்மையில், ஒரு தொலைக்காட்சி நிறுவன அறிவிப்புப் பார்த்தோம். அதில், ""எப்போதும் தூயத் தமிழ் பேசுபவரா நீங்கள்? தொடர்பு கொள்ளுங்கள்'' என்று எழுத்தில் காட்டித் தொலைப்பேசி எண் தந்திருந்தார்கள். நல்ல தமிழார்வமும் பற்றும் உடையவர் தாமும் வழுக்கிடும் இடம் "வலி மிகுதல்' இலக்கணத்தில்தான். தூய தமிழ் என்று எழுத வேண்டிதைத் தூயத் தமிழ் என்று வலி மிகுந்து எழுதியிருந்தனர். தூய என்பது முற்றுப் பெறாத சொல், அது தமிழ் என்னும் பெயர்ச்சொல் கொண்டு முடிகிறது. ஆதலின் இது பெயரெச்சமாகும். பெயரெச்சத்தில் (க்,ச், த், ப்) வல்லொற்று மிகாது. தூய தமிழ், ஆயகலை, தீயசிந்தை என்னும் எடுத்துக்காட்டுகள் காண்க. (ஓடிய குதிரை, பாடிய பெண் போன்றனவும் கருதுக)

"யார்கொலோ முடியக் கண்டார்?' இத்தொடரில் முடிய என்னும் சொல்லோடு "க்' வல்லொற்று மிகுதல் ஏன்? தூய என்பதிலும் முடிய என்பதிலும் "அ' ஓசை உள்ளது. இதனை அகர ஈறு என்போம். இரண்டிலும் வருமொழியில் வல்லெழுத்து உள்ளது. ஏன் ஒன்றில் மிகவில்லை? ஒன்றில் மிகுகிறது? நிலைமொழி (தூய, முடிய) ஒரு தன்மைத்தாயினும், வருமொழி வேறுபடுகிறது. "தமிழ்' பெயர்ச்சொல். "கண்டார்' வினைச் சொல். முடிய என்னும் எச்சம் கண்டார் என்னும் வினை கொண்டு முடிதலின் இது வினையெச்சம்.

அகரவீற்றுப் பெயரெச்சம் முன் வல்லொற்று மிகாது. அகர வீற்று வினையெச்சம் முன் வல்லொற்று மிகும். காயக் காண்பது, உலவச் சென்றான், வலியத் திணித்தார் என்பனவும் காண்க.

இப்படித்தான் முன்னர் ஒருகால், "தமிழ்ப்பேசு, தங்கக்காசு' எனத் தலைப்பிட்டு, நம்மை நடுவராகப் பணியாற்ற அழைத்தனர். நாம் சென்ற பின், தலைப்பைத் "தமிழ் பேசு, தங்கக்காசு' எனத் திருத்தினோம். தமிழ் பேசு- தமிழில் பேசு, தமிழைப் பேசு வேற்றுமைத் தொகையில் மிகாது. தமிழ்ப் பேராசிரியர் - தமிழில் வல்ல பேராசிரியர்- தமிழைக் கற்ற பேராசிரியர் - உருபும் பயனும் உடன் தொக்க தொகையில் வல்லொற்று மிகும்.

திருத்தம், மாற்றம் செய்யலாமா?

"தக்கார் தகவிலர் என்பது அவரவர்

எச்சத்தால் காணப் படும்' - என்பது திருக்குறள். ஒருவர் தக்கவர் (சிறந்தவர்) என்பதும், தகுதி அற்றவர் என்பதும் அவர் வாழ்க்கைக்குப் பின் எஞ்சியிருக்கும் சொல் கொண்டு தீர்மானிக்கப்படும் என்பது இதன்பொருள். எச்சம் - எஞ்சியிருப்பது- புகழோ? இகழோ? எச்சம் என்பதற்கு மக்கள் என்று பொருள் கொண்டார் பரிமேலழகர். ஒருவருக்குப் பின் அவர்தம் மக்களே (பிள்ளைகள்) அவர் பெயர் சொல்பவர்கள் என்பது கருத்து.

இதனைப் படித்த நல்லறிஞர், தமிழ் படித்த ஆர்வலர் "எல்லீஸ்துரை' இத்திருக்குறளில் எச்சம் எனும் சொல்லை நீக்கிவிட்டு மக்கள் என்னும் சொல்லைப் போட்டுவிட்டார். இது சரியா? திருக்குறளில் கைவைக்க இவருக்கென்ன உரிமை? திருக்குறளைத் திருத்திட இவர் யார்? என்று தமிழறிஞர் உலகம் சினந்தெழுந்தது.

தக்கார் எனும் சொல்லுக்கேற்பவே மக்கள் என்பதில் எதுகை (க்) சிறப்பாக அமைகிறது. சீர் இலக்கணம் சிதையவில்லை. (எச்சத்தால் - தேமாங்காய்; மக்களால் - கூவிளம். காய் முன் நேர், விளம் முன் நேர் இரண்டிலும் வெண்டளையே). ஆயினும் எச்சம் என்பதன் முழுமையான - சிறப்பான பொருள் மக்களில் இல்லையன்றோ? ஒருவருடைய மறைவிற்குப் பின்னரும் அவர் பற்றிய நினைவு - புகழ் நிற்குமானால் (எச்சமானால்) அவர் மேலானவர். இல்லெனின் அவர் தகவு அற்றார் என்க.

எமது வாழ்விலும் - எமது எழுத்துகளில் நேர்ந்த ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்வோம். திரு.வி.க. அவர்களின் "வேட்டல்' நூல்கள் பற்றி ஒரு சிறப்பு மலருக்குக் கவிதை எழுதி அனுப்பியிருந்தோம். எண் சீர் விருத்தங்களாக அமைந்த நெடுங்கவிதை அது. முதல் விருத்தத்தின் தொடக்கம், "மலையிடையே அரும்பியதாம் மக்கள் வாழ்வு மாநதிகள் வீழருவி மணக்குஞ் சோலை'

என்று இருந்ததில், மாநதிகள் என்னும் சொல்லை நீக்கிவிட்டு பேராற்றின் என்று மாற்றிவிட்டார் மலர் பதிப்பு ஆசிரியர். நதிகள் வடசொல்லாம், ஆதலின் பேராறு என்று மாற்றினோம் என்றார் அவர். வந்ததே எமக்குச் சினம்! "எம் படைப்பை மாற்ற உமக்கென்ன உரிமை? மலையிடையே, மாநதிகள், மோனை அழகுடன் இருப்பதைக் கெடுத்துவிட்டீரே! பொருளாவது சரியாகப் பொருந்துகிறதா? பேராற்றின் வீழருவி என்றால் ஆற்றிலிருந்து அருவி விழுவதாகப் பொருள்தரும். அருவி வீழ்ந்துதான் ஆறாக ஓடும். பொருளும் கெட்டுவிட்டதே' என்று பொங்கினோம்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 55:-

உரத்த சிந்தனை' சிற்றிதழுக்கு ஒரு கவிதை கேட்டார்கள், சில ஆண்டுகள் முன்பு. "தணியாத வேட்கை' எனும் தலைப்பில் நாம் கவிதை அனுப்பி வெளிவந்த பின், சில திங்கள் கழித்து கேரள (மலையாள) தமிழ் அமைப்பு வெளியிட்ட ஒரு மலரில் எமது அதே கவிதை, எழுதியவர் பெயர் குறிப்பிடாமல் சில மாற்றங்களுடன் வெளிவந்துள்ளது. தலைப்பைத் "தணியாத தமிழ் வேட்கை' என மாற்றிவிட்டார்கள்.

"மின்மினிகள் ஒருநாளும் வெயிலோன் ஆகா' என்ற முதல் வரியில் வெயிலோன் எனும் சொல்லை எடுத்துவிட்டு சூரியன் எனும் சொல்லைப் போட்டிருந்தார்கள். வெயிலோன் தூய தமிழ்ச் சொல். சூரியன் வடசொல். அன்றியும் மின்மினிகள் என்பதற்கேற்ப வெயிலோன் என்பதில் ஓசையின்பம் (மோனை) உள்ளது. அதையும் கெடுத்துவிட்டார்கள். தமிழ்ச்சொல், வடசொல் என்று நாம் பாகுபாடு செய்து, தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை. ஆயினும் பொருத்தமான சொல்லை மாற்றிட இவர்களுக்கு என்ன அதிகாரம்? இத்தகைய செயலும் பிழையே என்பதைச் சுட்டிக்காட்டவே இவற்றை எழுதினோம். இதுபற்றி விரிவாக இத்தொடரில் எழுத வேண்டாமே என்று விடுத்திடுவோம்.

முருகன் அவதாரமா?

வைகாசி விசாகம் வரும்போதெல்லாம் நமது செய்தி ஏடுகளில் முருகனைப் பற்றி கட்டுரைகள் வரும். வந்து கொண்டுள்ளன. விசாகம், முருகன் அவதாரம் செய்த நாள் என்று எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு காட்சி ஊடகத்தில் முருகப் பெருமான், கிழவனாக அவதாரம் செய்து வள்ளியிடம் சென்றான் என்றும் சொன்னார்கள். கிழவனாக உருமாறியதையும் அவதாரம் என்றார்கள்.

வைணவநெறியில் அவதாரம் உண்டு. பரம்பொருள் (பெருமாள்) பூமிக்கு இறங்கி வந்து மனிதனாகப் பிறப்பெடுப்பார். பிற உயிரினங்களாகப் பிறப்பெடுத்தலும் உண்டு. அவதாரம் எனில் "கீழே இறங்கி வருதல்' என்று பொருள். வானிலிருந்து தேவன் பூமிக்கு வருதலே அவதாரமாம்.

சைவசித்தாந்த நெறியில் அவதாரக் கொள்கையில்லை. பரம்பொருள் (சிவன்) மனித வடிவில் வந்து அற்புதங்களை நிகழ்த்துவார்; காட்சி தருவார்; மறைந்து போவார். சிவன் வேறு, முருகன் வேறல்லர்.

""ஆதலின் நமது சக்தி அறுமுகன் அவனும் யாமும்

பேதகம் அன்றால் நம்போல் பிறப்பிலன் யாண்டும் உள்ளான்'' என்பது சிவன் கூற்றாகக் கந்தபுராணம் சொல்லுவது.

"பிறவன் இறவான் பெம்மான் முருகன்' என்றார் அருணகிரியார். அதனால்தான்,"ஒருதிரு முருகன் வந்து உதித்தனன் உலகம் உய்ய' என்றார் கச்சியப்பர். கதிரவன் உதிப்பான்; மறைவான். மீண்டும் உதிப்பான். பிறப்பு வேறு, உதித்தல் வேறு. பிறப்பு உண்டு எனில் இறப்பும் உண்டு. பரம்பொருள் பிறப்பு, இறப்பு இல்லாததன்றோ?

இராமபிரானைப்போல், கண்ணபிரானைப் போல் முருகப் பெருமான் உயிர்நீத்தமை (சிறப்பு) சொல்லப்படவில்லை. ஆதலின் முருகன் அவதாரம் செய்தார் என்றும் அவதார நட்சத்திரம் விசாகம் என்றும் ஆன்மிகப் பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் பேசாமலும் எழுதாமலும் இருத்தல் நல்லது என்று பணிவோடு வேண்டுதல் விடுக்கிறோம்.

முறையாகுமா இந்த மொழிக்கலப்பு?

வேளாண்மையில் கலப்புமுறை விளைச்சல் என்பது வரவேற்கத் தக்கதாகலாம். கலப்புத் திருமணங்களும் பாராட்டத்தக்கவையே. ஆனால் மொழிக் கலப்பு அத்தகையதாகாது. தமிழில் பிறமொழிக் கலப்பு காலம் காலமாக நடந்து வருவதுதான். ஆனால் இப்போது தமிழில் ஆங்கிலம் கலப்பதுபோல் இவ்வளவு கேவலமாக முன் எப்போதும் நடந்ததில்லை.

ஆங்கிலத்தில் பேசுவது நாகரிகம். படித்தவர்க்கு அடையாளம் என்றே இப்போதும் பலர் கருதுகிறார்கள். பள்ளிப் பிள்ளைகள், வீட்டிலிருந்து புறப்படும்போது, "அம்மா போயிட்டு வர்றேன்' என்று சொல்லுவதைப் பெற்றோரே இழிவாகக் கருதுகிறார்கள். "மம்மி பை பை, டாடி பை பை' என்று சொல்லப் பழக்கிவிடுகிறார்கள். மதிய உணவு என்பதைக் கூட "லஞ்ச்' என்று சொல் என்று கட்டாயப்படுத்துகிறார்கள்.

யாரும் இப்போது வீட்டிலிருந்து எழுந்து விடை பெறும்போது "போய் வருகிறேன்', அல்லது "வரட்டுமா?' என்று சொல்லுவதில்லை. எல்லாரும் "பை பை' தான். ஆங்கிலத்தில் படித்தால் மட்டுமே அறிவு வளரும் என்ற புதிய மூடநம்பிக்கை நாட்டில் பரவிக் கிடக்கிறது. வாழ்ந்து மறைந்த - வாழ்ந்து கொண்டுள்ள சாதனையாளர்கள் - அப்துல்கலாம் போன்றவர்கள் யாவரும் தமிழில் படித்தவர்கள் என்பதை மறந்து விடுகிறோம்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 56:-

வடக்கே வாழ்பவர்கள், நாம் அவர்களைச் சந்திக்கும்போது, நமக்கு, இந்தி தெரியாது என்று தெரிந்தும் நம்மோடு இந்தியில்தான் பேசுகிறார்கள். நாம் உடனே "இந்தி மாலும் நை' என்று சொல்லிவிட்டு ஆங்கிலத்தில் பேசுகிறோம். அப்போதும் அவர்கள் இந்தியில்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்று நினைத்துவிடாதீர்கள். தெரிகிறது. நன்றாகவே ஆங்கிலம் கற்றிருக்கிறார்கள். ஆனாலும் நம்மோடு ஆங்கிலத்தில் பேச மறுக்கிறார்கள். ""நீங்கள் ஏன் இந்தி படிக்கவில்லை?'' என்று நம்மைக் கேட்கிறார்கள். நம்மை எப்படியாவது இந்தி பயிலச் செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். இச் செய்தி பட்டறிந்து உணர்ந்தது. நமக்கு (தமிழர்க்கு) ஏன் இந்தப் பற்று இல்லை?

நம்முடைய காட்சி ஊடகங்களில், இசை, நாட்டியம், நகைச்சுவை, சந்திப்பு, திரைப்படம் என்று எந்தப் பொருளில் நிகழ்ச்சி நடந்தாலும், நிகழ்ச்சியின் வருணனையாளர்- அவருடன் உரையாடும் விருந்தினர், நடுவர்கள் - இப்படி யாராக இருப்பினும் தமிழில் பேசுகிறார்களா? தமிழில் தொடங்குவார்கள். பிறகு கடகடவென என்ன சொல்லுகிறார் என்பதே நமக்குப் புரியாதவாறு ஆங்கிலத்தில் கொட்டி முழக்குகிறார்கள். பிறமொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர் பேசினால் கூட ஏற்றுக் கொள்ளலாம். தமிழைத் தாய்மொழியாக உடையவரும் பேசும்போது எரிச்சல் ஏற்படுகிறது.

நமது திரைப்படங்களும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் தமிழை வளர்க்க வேண்டுமென்று நாம் கோரவில்லை. தமிழைச் சிதைக்காதீர்கள். இருப்பதைக் கெடுக்காதீர்கள் என்றே வேண்டுகிறோம். "ஜாலியோ ஜிம்கானா' பாடல் கேட்டிருக்கிறோம். "டடடா டடடா டட்டாடடா' பாட்டும் நாம் அறிவோம். "மேலே பறக்கும் ராக்கெட்டு, மின்னல் பூச்சி ஜாக்கெட்டு' என்றும் நம் காதுகளில் தேள் கொட்டியுள்ளது. இப்போது கருநாகப் பாம்பே வந்து கடிக்கிறது:

"யூ வான்ட் டு சீல்மை கிஸ்

பாய் யூ கான்ட் டச் திஸ்

எவரிபடி ஹைப்நோடிக் ஹைப்நோடிக்

சூப்பர் சானிக்

சூப்பர் ஸ்டார் கான்ட் கான்ட் கான்ட் கெட் திஸ்' இப்படிப் போகிறது தமிழ்ப் படப்பாட்டு. சூழ்நிலைக்கேற்ப நாங்கள் எழுதுகிறோம் என்பார்கள். பின்னர் ஏன் பாட்டைத் தமிழில் தொடர வேண்டும்?

"பூஜ்ஜியம் என்னோடு
பூவாசம் இன்றோடு
மின்மினிகள் விண்ணோடு
மின்னல்கள் கண்ணோடு'

ஏனிந்தக் கலப்படம்? இது ஒரு சோறுதான். பானைச் சோறு அப்படியே இருக்கிறது. கொட்டிக் காட்ட இடமில்லை.

திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் வைத்தால் தான் மானியம் கிட்டும் என்றார்கள். தமிழ்ப் பத்திரிகைகள் பல தம் தமிழ்ப் பெயரோடு ஆங்கிலத்தையும் இணைத்துக் கொள்வது ஏன்?

"ஃகாபி வித்...', "இன்டர்வியூ', "ஹிட்சாங்ஸ்', "ஓல்டு ஈஸ் கோல்டு' இப்படிப் பல தலைப்புகளில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். இவை தவிர பிறமொழித் தொடர்கள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, "கன்னாபின்னா' என்று தமிழில் வந்து கொண்டுள்ளன. யார் கேட்பது? யாரிடம் முறையிடுவது? தமிழன்... தமிழன் என்று பேசுவது வீண் பேச்சு. தன் அன்னை ஊட்டி வளர்த்த மொழி - அமுதம் அனைய மொழியைச் சிதைத்தும், சிதைவதைக் கண்டும் வாளா இருக்கிறோமே! "நாம் தமிழர்' என்பதில் நமக்குப் பெருமை இருக்கிறதா?

இப்படியெல்லாம் சிந்தித்தால் மொழிவெறி என்று தூற்றுவது முறையா? ஊர் உலகத்தைச் சுற்றிப் பாருங்கள்; சுற்றி வந்தவர்களைக் கேளுங்கள். எங்கும் இத்தகைய கொடுமை - உலக நாடுகளில் - இல்லை, இல்லவே இல்லை.

நம்முடைய விழுமியங்கள் பாழாகின்றன; பண்பாடு பறிபோகிறது; ஒழுக்கம் கெட்டழிகிறது; மொழி சித்திரவதை செய்யப்படுகிறது. காட்சிகளால், கருத்துகளால், உடைகளால், உரையாடல்களால் அனைத்தானும் கெட்டுக் கலப்புச் சாதி ஆனதோ தமிழ்ச்சாதி என்று அரற்ற வேண்டியுள்ளதே!

காலத்தின் போக்கை அறியாமல் பழங்கதை பேசுகிறோம் என்று கருத வேண்டாம். எத்தனை காலம் மாறினாலும் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டாலும் மொழியும் பண்பாடும் சீரழிய நாம் அடைகின்ற வளர்ச்சி உண்மையில் வளர்ச்சியாகாது.

"ஓகே, ஓகே', "வெரி நைஸ்', "ஒன்டர்புல்', "சூப்பர்', "தாங்யூ சோ மச்', "ஃபென்டாஸ்டிக் ', "ஷியூர் ஷியூர்' என்றெல்லாம் நம் பேச்சில் இணைந்து வரும் சொற்களால் நாம் உயர்ந்துவிடமாட்டோம். நம் செயல்களே நம்மை உயர்த்துகின்றன. உலகம் போகிற போக்கில் நாமும் போக வேண்டும் என்பார்கள். செம்மறி ஆட்டுக் கூட்டமாய்ப் போக வேண்டுமா? சிந்தனையுள்ள மனிதனாக வாழ வேண்டுமா?

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 57:-

நிலஅபகரிப்பும் நிலப்பறிப்பும்: செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சியிலும் நில அபகரிப்பு வழக்குகள் பற்றிய செய்திகள் நிரம்ப வந்து கொண்டுள்ளன. மற்ற எல்லாரும் நில அபகரிப்பு என்றே வழங்கிவர, நமது தினமணியில் மட்டும் நிலப்பறிப்பு என்று தூய தமிழ் ஆளப்படுவது கண்டு மகிழ்ச்சி. சிலர், சில நேரங்களில் நில அபகரிப்பு என்பதை நில ஆக்கிரமிப்பு என்றும் செய்திகள் வெளியிட்டார்கள். நமது நிலப்பரப்பில் சீனாவோ, பாகித்தானோ ஒரு பகுதியைப் பிரித்து வைத்துக் கொண்டபோது அதனை ஆக்கிரமிப்பு என்று சொல்லி வந்தோம். ஆனால் இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு என்னும் சொல் பொருந்துவதாக இல்லை. ஆக்கிரமித்தல் என்றால் ஆங்காரம் பண்ணுதல் என்று பொருள். ஆங்காரம் என்பது ஆணவமாகும்.

மக்கள் பேச்சு வழக்கில் "ரொம்பவும் ஆங்காரம் பிடித்தவன்/ள்' என்று சொல்லக் கேட்டிருப்பீர்கள். நாம் நினைப்பது போல ஒன்றை ஓரிடத்தை வன்முறையில் கைப்பற்றுவது ஆக்கிரமிப்பு ஆகாது. வலுக்கட்டாயமாக (வலுவந்தமாக) பறித்துக் கொள்ளுதலைக் குறிக்க ஆக்கிரகித்தல் என்ற ஒரு சொல் உண்டு. அபகரிப்பு, ஆக்கிரமிப்பு, ஆக்கிரகித்தல் எனும் மூன்று சொற்களும் தூய தமிழ்ச் சொற்கள் அல்ல.

முடிவாகத் தனிநபர்கள் பிறரை மிரட்டி, அச்சுறுத்தி எடுத்துக் கொள்ளுவதை நிலப்பறிப்பு, வீடு பறிப்பு என்றே எழுதிடலாம். அந்நிய நாடு நம்நாட்டின் நிலப்பரப்பைத் தம்மதாக வன்முறையில் ஆக்கிக் கொள்ளுவதைக் கைப்பற்றிக் கொண்டது என்றோ வன்முறையால் பறித்துக் கொண்டது என்றோ எழுதிடலாம். தவிர மோசடி என்னும் சொல் புழக்கத்தில் உள்ளது. இதற்கு வஞ்சித்தல் என்பதே நல்ல தமிழ்ச்சொல்லாகும்.

சொற்றொடர் (வாக்கிய) அமைப்பில் கருத வேண்டியவை: நாம் எழுதுகின்ற சொற்றொடர் தவறான பொருளுக்கு இடம் தராத வகையில் அமைந்திட வேண்டும்.

"பெண் வங்கி அதிகாரி படுகொலை' என்று ஒரு செய்தி சில நாள் முன்னர் ஓரேட்டில் கண்டோம். பெண் வங்கி என்று தொடங்கும்போது, பெண்களுக்கான வங்கி எனும் பொருள் தருமன்றோ? (அப்படி ஒரு வங்கி இல்லை என அறிவோம்).

ஆனாலும் பொருள் மயக்கம் ஏற்படாதவாறு வங்கிப் பெண் அதிகாரி படுகொலை என்று எழுதலாமே.

இதுபோலவே, "பெண்கள் நுகர்வோர் கூட்டுறவுச் சங்கம்' என ஒரு பெயர்ப் பலகை ஒரு சமயம் பார்க்க நேர்ந்தது. இத்தொடரை "நுகர்வோர் மகளிர் கூட்டுறவுச் சங்கம்' என்று மாற்றி எழுதுதல் வேண்டும். முன்னர் உள்ள சொற்றொடர் ஒரு தவறான கருத்துக்கு இடம் தருகிறது. பெண்களை நுகர்வோர் (அனுபவிப்பவர்) என்ற பொருள் ஏற்படும் என்பதை அறிக. ஆதலின் மிகக் கவனமாக நாம் சொற்றொடர்களை அமைத்திடல் வேண்டும்.

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு நூல்களையும் அகநானூறு, புறநானூறு நூல்களையும் பதிப்பித்தவர் தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதய்யர் என்று ஒரு கட்டுரையில் அண்மையில் படித்தோம். அகநானூறும், புறநானூறும் எட்டுத் தொகை நூல்கள் எனும் தொகுப்பில் அடங்கியவைதாம். அவற்றைத் தனியே எழுதுவது பொருளற்றது. பல புலவர்களால் பாடப் பெற்ற பாடல்களை எட்டு நூல்களாகப் பிற்காலத்தில் தொகுத்தமைத்தனர். அவையே எட்டுத் தொகை நூல்கள் எனப்பட்டன.

பெண்கள் மட்டுமா?

"சில சொற்கள் பெண்களை மட்டுமே குறிப்பனவாக இருக்கின்றன; அவற்றுக்கு ஆண்பாற் சொற்கள் தமிழில் இல்லை'' என்று கூறி விபசாரி, விதவை- இச்சொற்களுக்கு ஆண்பால் என்ன? ஆண்கள் எப்படியும் இருக்கலாம். பெண்களுக்கு மட்டுமே இந்த இழிவு'' என்று சொல்கிறார்கள்.

விபசாரி என்பதுபோல் விபசாரன் இல்லாமையால் ஆண் பல பெண்களோடு உறவு கொள்ளலாம், அவனுக்கு ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லை என்றும், இதுபோலவே விதவை என்பதுபோல் விதவன் என்று இல்லாமையால், மனைவியை இழந்தவன் மறுமணம் செய்து கொள்ளலாம் என்று பொருளுரைத்துப் பெண்ணடிமைத்தனத்தின் சின்னங்கள் இச்சொற்கள் என்று கொள்ளுவதில் தவறில்லை. ஆனால் இவ்விரண்டும் தமிழ்ச் சொற்கள் அல்ல. வடசொற்கள்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 58:-

விபசாரிக்குத் தமிழில் பரத்தை என்று பெயர். இதற்கு நிகரான ஆண்பாற் சொல் பரத்தன் என்று தமிழில் இருக்கிறது. "நண்ணேன் பரத்த நின் மார்பு' (தலைவி கூற்று) எனும் சங்கத் தொடர் காண்க. சிலப்பதிகாரத்தில் இருபாலர்க்கும் ஏற்பப் பொதுமையில் பரத்தர் எனும் சொல் எடுத்தாளப்பட்டுள்ளது. "வம்பப் பரத்தர் வறுமொழி யாளர்' என்பது சிலம்பு. ஆதலின் தமிழில் பரத்தை - பரத்தன் இருபாற் சொற்களும் உண்டு எனக் கண்டு மகிழ்க. விதவைக்குத் தமிழ்ச் சொல் கைம்பெண். இச்சொல்லை நீட்டி கைம்பெண்டாட்டி ஆக்கி, இது மருவி கம்மனாட்டி என்று பேச்சு வழக்கில் உள்ளது. திட்டுகிறபோது, "போடா கம்மனாட்டி' என்றோ, "கம்மனாட்டிப் பயலே' என்றோ வழங்குதலும் காண்கிறோம். ஆகவே கைம்பெண் (விதவை) எனும் சொல்லுக்கு ஆண்பால் - கைம்(பெண்)பயல் என்பதே ஆகும்.

மீண்டும் சில வாக்கியப் பிழைகள்: தொலைக்காட்சிச் செய்தியில் ஒருநாள், "வன்முறைத் தாக்குதல்களுக்கு உயிரிழந்தனர்' என்று படிக்கப்பட்டது.

தாக்குதல்களுக்கு உயிரிழந்தனரா?

தாக்குதல்களால் உயிரிழந்தனரா?

இரண்டாவதுதான் பொருத்தமாக உள்ளது. தாக்குதலுக்குப் பலி ஆயினர் என்னும்போது வாக்கியம் சரியாகும். இரண்டு வகையாலும் சொல்லிப் பாருங்கள். வேற்றுமை புலப்படும்.

மற்றொரு செய்தி: "ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் கொள்ளை'. இதைக் கேட்டவுடன், அடுக்குமாடி வீடுகளில் ஓரடுக்கு உண்டா? குறைந்தது இரண்டு அடுக்காவது இருக்குமே என்று நினைக்கத் தோன்றியது. ஒரு என்பதை அடுக்கு எனும் சொல்லோடு இணைத்துக் காண்பது இயல்பாக எழும் எண்ணமே. இவ்வாக்கியத்தை, "அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கொள்ளை' என்று எழுதினால் - படித்தால் பொருள் உணர்த்துதலில் பிழையின்றி அமையும். சற்றே கவனம் கொள்ளுதல் வேண்டும்.

ஓர் இலக்கியத் திங்களிதழில் ஒரு வாக்கியம்:

"இதெல்லாம் நடைமுறை நியாயங்கள்'. இத்தொடர் சரியா? இது என்பது ஒருமை. நியாயங்கள் பன்மை. இவையெல்லாம் நடைமுறை நியாயங்கள் என்று எழுதியிருக்க வேண்டும். (இப்படி நுட்பம் காண்பது நடைமுறை நியாயமா என்று முணுமுணுக்காதீர்)

மற்றொரு திங்களேட்டில், "எத்தகைய இடர்பாடுகள் ஏற்பட்டாலும், மக்கள் உந்தாற்றல் பெருகிறார்கள்' என்று கண்டோம். இவ்வாக்கியத்தில் இரண்டு பிழைகள். இடர்ப்பாடுகள் என்று ஒற்றுச் சேர்த்து எழுத வேண்டும். மற்றது, உந்தாற்றல் பெறுகிறார்கள் என்று (பெறுதல்) எழுத வேண்டிய இடத்தில் பெருகிறார்கள் என இடையினம் (பெருகுதல்) போட்டது பிழை. உந்தாற்றல் எனும் அருஞ்சொல் எழுதவல்லார் பெறுதலைப் பிழையாக்கலாமா?

அரித்துவார் கங்கையின் பெருக்கோடு இமயமலையின் மடியில் (அடிவாரத்தில்) அமைந்த இயற்கையெழில் செறிந்த இடம். அந்த ஊரைப் போல் மனத்திற்கு அமைதி தரும் மற்றொரு ஊர் பற்றி எழுதியுள்ள ஓர் எழுத்தாளர், "கங்கையில்லாத ஹரித்துவாரைப் போன்ற மனதுக்கு அமைதியளிக்கும் இதமான சூழ்நிலை' என்று குறிப்பிட்டுள்ளார். ஹரித்துவாரில் கங்கை ஓடவில்லை என்பதான ஒரு கருத்தும் இவ்வாக்கியத்தில் ஏற்படக் கூடுமன்றோ? இதனைத் தெளிவாக எப்படி எழுதலாம்?

"மனத்திற்கு அமைதியளிக்கும் இதமான - ஹரித்துவாரைப் போன்ற சூழ்நிலை - ஆனால் கங்கை மட்டும் இல்லை' என்று எழுதலாமே?

"மக்காவ்' என்பது ஒரு தீபகற்ப நாடு. இந்நாட்டைப் பற்றி எழுதிவரும் ஒருவர், மக்காவில் - என்று தொடங்கி ஒரு செய்தி. மக்கா என்று அரபுநாட்டில் ஓர் ஊர் உண்டே! முகம்மது நபி பிறந்தது மக்காவில். வெறியர்களால் துரத்தப்பட்டு மதீனா சென்றார். ஆதலின் மக்காவில் என்று எழுதும்போது மக்கா என்ற ஊரின் பொருள் தோன்றி வரும். பின் எப்படி எழுதலாம்?

"மக்காவ்' இல் என்று எழுதலாம். இது சற்றே கடினமாகத் தெரிகிறது. சற்று விரிந்து அமையினும், மக்காவ் நாட்டில் என்று எழுதுவதே பொருத்தமுடையதும், பிழையற்றதும் ஆகும்

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 59:-

தொலைக்காட்சி செய்திகளில் இப்படிப் படித்தார்கள்:

"கப்பலோட்டிய தமிழர். செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து'' என்று தொடர்ந்தது அச் செய்தி.

சிதம்பரனார் அவமதிப்புச் செய்தாரா? யாருக்கு? எப்போது? ஏன்? என்ற வினாக்கள் எழுகின்றன. அந்நிகழ்வு என்னவென்றால்,அவரது திருவுருவப் படத்துக்கு அவமதிப்புச் செய்தமை பற்றியதாகும். அதனால், வ.உ.சிதம்பரனார் படத்துக்கு அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ, வ.உ.சிதம்பரனாரை அவமதிப்புச் செய்ததைக் கண்டித்து என்றோ அந்தச் செய்தியைச் சொல்லியிருக்க வேண்டும். சிதம்பரனார் அவமதித்ததாகப் பிழையான பொருள் தோன்றும்படி இருத்தல் தகாது.

ஆற்றின் பெயரால் அமைந்த பெயர்களை "ஆர்' விகுதிபோட்டு எழுதும் கேடு பற்றி முன்னரே விரிவாக எழுதியுள்ளோம். (எ-டு) அடையாறு - அடையார், செய்யாறு - செய்யார். இப்பெயர்களைப் போலவே குமரி மாவட்டம் திருவட்டாறு என்னும் ஊர்ப் பெயரும் திருவட்டார் என்று எழுதப்படுகிறது. அண்மையில் செய்தி ஏடுகளில் வந்த ஒன்று:

"திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலிலும் பாதாள அறைகளில் பொன், வெள்ளி ஆபரணங்கள் உள்ளன'. "ஏறக்குறைய இருபத்தெட்டு நாட்களுக்கும் மேல் இவர் பயணம் செய்துள்ளார்' என்று ஒரு சொற்றொடர் சிற்றிதழ் ஒன்றில் பார்த்தோம். ஏறக்குறைய (சுமார்) என்ற சொல். இருபத்தெட்டு எனும் வரையறுத்த எண்ணிக்கையோடு பொருந்தவில்லை. ஏறக்குறைய முப்பது நாடுகளுக்கு என்றிருக்கலாம். "மேல்' என்னும் சொல்லும் குறிப்பிட்ட எண்ணிக்கையின் பின் ஒட்டுதல் வேண்டாமே.

சிறுவர்க்கான பாட்டு ஒன்று. "உன்னதத்தைப் பெருவதற்கு' என்று அச்சாகியிருந்தது. உன்னதத்தைப் பெறுவதற்கு என்று இருத்தல் வேண்டும். பெறுதலும், பெருதலும் வேறு வேறு அன்றோ? அதிலும் பெரு என்பது பெரிய என்னும் பொருள் மட்டுமே தரும். பெருவதற்கு எனும் சொல்லுக்கு எந்தப் பொருளும் இல்லை. உன்னதம் பெருகுவதற்கு என்று வந்தால் பொருளுடையதாகும். பழம்பெரும் நடிகர் என்பதைப் பழம் பெறும் நடிகர் ஆக்குதல் எப்படித் தவறோ அப்படியே, பெறு - பெருவாதலும் பிழையே.

"உதவி செய்ய எண்ணு' என்பது முதல் வரி. புளிமா, தேமா, தேமா என மூன்று சீரும் மாச்சீராக உள்ளன. இஃதொரு அறுசீர் விருத்தத்தின் தொடக்கம். இறுதிவரை இந்த அமைப்பு (கட்டளை) மாறக்கூடாது என்று முன்னரே எழுதியுள்ளோம். இந்த மழலைப் பாட்டில், "மாற்றுத் திறனாளி மனத்தில்' என்று மூன்றாவது வரி அமைக்கப்பட்டுள்ளது. மா - காய் - மா எனும் கட்டளைகள் அமைந்துள்ளமை பிழையேயாகும். கவிஞர்கள் இந்த நுட்பங்களிலும் கவனம் செலுத்துதல் நன்று. அடிதொறும் அமைய வேண்டிய எதுகை அமைப்பும் இல்லை (உதவி - மாற்று).

இன்னொரு பாப்பாப் பாட்டில் ஒருவர் எழுதியிருந்தார்:

"உடன் செய்க உயர்வாய்' "கருணை காண்பி சிறப்பாய்', "உதவிக் கரங்கள் நீட்டு' - ஒன்றொடொன்று பொருந்துவதாக இவ்வரிகள் அமையவில்லை. கட்டளை (அமைப்பு) மாற்றத்துடன் எதுகை மோனைகளும் இடர் செய்கின்றன. யாப்பு இலக்கணம் பயின்று எழுதுதல் நல்லது.

மொழிக்கலப்பு: மொழிக் கலப்படம் பற்றி முன்னர் விரிவாக எழுதியுள்ளோம். எழுத எழுத மாளாத வண்ணம் மொழிக் கலப்பு நாளும் பெருகி வருகிறது. "பண்ணு' என்பதைப் பயன்படுத்தி எப்படி "பண்ணித் தமிழ்' பேசுகிறோம் என்பதையும் முன்னரே எழுதியிருக்கிறோம். அண்மையில் ஒரு சமையல் கலை நிகழ்ச்சி தொலைக்காட்சியில் கண்ணிற்பட்டது. பேசுகின்ற பெண்மணி குக் பண்ணி, ஷேக் பண்ணி, என்று பல பண்ணிகளை அடுக்கினார். சமைத்து, கலக்கி என்று சொன்னால் நமக்குப் புரியாதா? இடியாப்பம், கொழுக்கட்டை, குழிப் பணியாரம் போன்ற தமிழ்நாட்டுக்கே உரிய உணவுப் பொருள்களைப் பற்றி விரிவாக விளக்குவதும், பாதி ஆங்கிலம், பாதித் தமிழ் என்னும் வகையில்தான். ஆப்பக்கடை என்று தமிழில் பெயர் வைத்து ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். அது ஆப்பக்கடையா? அப்பக்கடையா எனும் ஐயம் எழும்.

பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்

(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)

மொழிப்பயிற்சி - 60:-

பிற மொழி கலந்து பேசுபவர்கள் குழந்தைகளை எப்படிக் கொஞ்சுவார்கள் என்று புலப்படவில்லை. "என் ஐயே...', "மை கோல்டே' என்று கூறிக் கொஞ்சுவார்களா? அழுது அரற்றும்போது, மதர் கோயிட்டாங்களா? டாட் போயிட்டாங்களா? என்பார்களோ?

பணியாற்றும் பெண்களை "அம்மா' என்றழைத்தால், நான் என்ன உங்கள் அம்மாவா? என்கிறார்கள். மேடம் என்று சொன்னால் (இதன் பொருள் அம்மாதானே?) மகிழ்கிறார்கள். இப்போது மேடமும் போய், "மேம்' என்கிறார்கள். இஃதென்ன மேம், மேம் என்று ஆட்டுக்குட்டிதான் கத்தும். "சார்' என்று சொல்லுக்குப் பொருளே கெட்டுவிட்டது.

ஓட்டுநர், நடத்துநர், அஞ்சல்காரர், பணியாளர், உணவு வழங்குபவர் எல்லாரும் சார்தான். அண்ணே, தம்பி, ஐயா என்று இடத்துக்கேற்ப, வயதிற்கேற்ப தமிழில் அழைக்கலாமே.

தெய்வத் திருப்பெயர்கள்:
அழகான தூய தமிழில் இறைவி, இறைவன் திருப்பெயர்கள் தமிழில் நிரம்ப உள்ளன. அலர்மேல் மங்கை எனில் (அலர் - மலர்) தாமரை மீது அமர்ந்துள்ள திருமகளைக் குறிக்கும். இப்பெயரை அலமேலு ஆக்கிவிட்டோம். திருவேங்கடமலை மீது எழுந்தருளியுள்ள இறைவன் வேங்கடராமன். இந்தப் பெயரை வெங்கட்ராமன் ஆக்கிவிட்டோம். அதுவும் இப்போது வெங்கட், வெங்கி எனச் சுருங்கிக் கெட்டது.

அன்னை உமையவளுக்கு உண்ணாமுலையம்மை என்ற பெயருண்டு. திருஞான சம்பந்தருக்குப் பொற் கிண்ணத்தில் எடுத்துப் பால் ஊட்டினார் என்பது தொல்கதை.

அண்ணாமலை நாதரின் துணைவியான உண்ணாமுலையம்மையை உண்ணாமலையம்மை ஆக்கிவிட்டார்கள். (விநாயகரோ, முருகப் பெருமானோ தாய்ப்பால் உண்டவர் அல்லர்)

மட்டுவார் குழலி என்பது அம்மையின் திருப்பெயர். மட்டு என்பது தேன். தேன் பொருந்திய (புத்தம் புதிய) மலர்கள் சூடிய கூந்தலை உடையவள் என்பது இதன் பொருள். (குழல் - கூந்தல்) எவராவது இப்பெயர் கொண்ட பெண்ணை இப்பெயர் சொல்லி அழைக்கிறார்களா? இல்லை. அடியே மட்டு என்றோ, மட்டு... மட்டுக்குட்டி என்றோதான் அழைக்கிறார்கள். (இந்தப் பெயர் உடையவரும் இப்போது அரிதுதான்)

அவிநாசிலிங்கம் என்பது ஒரு திருப்பெயர். அவிநாசி என்னும் ஊரில் எழுந்தருளியுள்ள சிவன் என்பது பொருள். இப்பெயரை அவினாசிலிங்கம் என்று ஆக்கிவிட்டவர் பலர். கிருஷ்ணன் (வடசொல்) கிட்னன் ஆனதும் உண்டு. கோபாலன் "கோவாலு' ஆனதும் சரஸ்வதி - சச்சு ஆனதும் நாம் அறிந்தவை. (இவை தமிழ் ஒலித் திரிபுகள் எனக் கொள்ளலாம்)

ஆயத் தீர்வையும் சாயப் பட்டறையும்:
நாம் முன்னர் ஆயகலைகள், தூய தமிழ் என்று ஒற்றுமிகாமல் எழுதிட வேண்டும் என எழுதினோம். அன்பர் ஒருவர் நேரில் வினவினார்: ""ஆயத் தீர்வை, சாயப் பட்டறை என்றெல்லாம் எழுதுகிறோமே இவையும் தவறோ?

''இல்லை, தவறில்லை; சரியானவையே. எப்படி? ஆய கலை தூய தமிழ் இரண்டிலும் அகர ஈறு இருப்பதும், வருமொழியில் வல்லின எழுத்து (க,ச,த,ப) வருவதும் சரிதான். ஆய எனும் சொல்லும், தூய என்னும் சொல்லும் முற்றுப் பெறாதவை. கலைகள், தமிழ் எனும் பெயர் சொற்களைக் கொண்டு அவை முடிந்தன. அதனால் அவை பெயரெச்சங்கள். பெயரெச்சங்களின் முன் க,ச,த,ப மிகாது.

ஆனால் ஆயம் + தீர்வை - ஆயத்தீர்வை, சாயம்+பட்டறை = சாயப்பட்டறை என்னும் போது ஆயம் என்பதும் சாயம் என்பதும் எச்சச் சொற்கள் அல்ல. பொருளுடைய பெயர்ச் சொற்கள். இவற்றிலுள்ள அம் (ம்) ஈறு கெட்டு வல்லொற்று மிக்கது. ஆதலின் சொற்களைப் பிரித்துப் பார்த்து எது சரி, எது தவறு என அறிய வேண்டும்.

அமுதம் + கண்ணன் = அமுதக் கண்ணன் என்று எழுதிட வேண்டும். அமுத கண்ணன் எனில் பிழையாம்.

சண்முகம் + கண்ணன் = சண்முகக் கண்ணன் என எழுதுக.
சரவணன் + தமிழன் = சரவணத் தமிழன் ஆகுமோ? ஆகாது. சரவணம் + தமிழன் எனில் ஆகும். சரவணன்+தமிழன் = சரவணற்றமிழன் என்றாகும். அம் ஈறு (ம்) அன் ஈறு (ன்) கொண்டு புணர்ச்சி விதி மாறுகிறது. அஃதென்ன புணர்ச்சி விதி? அறிவோமா?

புணர்ச்சி என்றால் சேர்ப்பது - சேர்வது எனப் பொருள். ஒரு சொல்லொடு மற்றொரு சொல் சேரும்போது ஏற்படும் தன்மையைப் புணர்ச்சி விதி என்பர். சொற்கள் ஒன்றோடொன்று சேர்வதில் இயல்புப் புணர்ச்சி, விகாரப் புணர்ச்சி என இருவகையுண்டு.

இரண்டு சொற்கள் சேரும்போது எந்த மாற்றமும் ஏற்படாமல் இயல்பாக (அப்படியே) இருப்பின் அது இயல்புப் புணர்ச்சி (எ-டு) தாமரை + மலர் = தாமரை மலர்

கந்தன் + வந்தான் = கந்தன் வந்தான்

இரண்டு சொற்கள் ஒன்று சேரும்போது மாற்றம் ஏற்பட்டால் அது விகாரப் புணர்ச்சி எனப்படும். தோன்றல், திரிதல், கெடுதல் (நீங்குதல்) என மாற்றங்கள் (விகாரம்) மூன்றாகும். நூலை+ படித்தான் = நூலைப் படித்தான். (ப்- தோன்றல்)

முள்+செடி = முட் செடி (ள், ட் ஆகத் திரிந்தது)
தோட்டம்+வேலை = தோட்ட வேலை (ம் - கெட்டது)

இவை பற்றி விரிவான விதிகள் உள்ளன. அனைத்தும் எழுதினால் இலக்கணப் பாடம் ஆகிவிடும்.