பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)
மொழிப்பயிற்சி -5:- தேவர்களும், அசுரர்களும் திருப்பாற்கடலைக் கடைந்தபோது அமுதம் (அமிர்தம்) தோன்றியதன்றோ? அந்த அமிர்தத்தைக் குடத்தில் கொண்டு வந்து திருமுழுக்கு (அபிஷேகம்) செய்யப் பெற்ற ஈசன் பெயர் அமிர்தகடேசுவரர்.(கடம் - குடம்). அந்தப் பெருமான் அருள்பாலிக்கும் ஊர் திருக்கடவூர். "திரு" எனும் அடைமொழி, தலங்களைச் சார்ந்து வருதல் அறிவோம். (அமிர்த) கடம் கொண்டு பூசிக்கப்பெற்ற ஊர் கடவூர். இந்த அழகான பெயர் இன்று என்ன ஆயிற்று? திருக்கடையூர் என்று வழங்கப்பட்டு வருகிறது.
- அறுபது அகவை நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி)
- எண்பதகவை நிறைவு (சதாபிஷேகம்)
விழாக்கள் செய்திட மிகச் சிறந்த புனிதத் திருத்தலம் - மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறு வரம் தந்த சீர்த்தலம், கடையூரா? கடைப்பட்ட ஊரா?
சிந்தியுங்கள்; பிழையைத் திருத்துங்கள்.
சோலை ஒன்றில் ஒரு சிலந்தியும், ஆனையும் (யானையும்) சிவனை வழிபட்டு முத்தி பெற்ற திருத்தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி நகரில் திருவரங்கம் செல்லும் வழியில் அமைந்துள்ள பாடல் பெற்ற தலம் இது. ஆனையொன்று தான் தோன்றியாய் (சுயம்புவாக) எழுந்த சிவனை வழிபட்ட சோலை, ஆனைக்கா எனப் பெயர் பெற்றது. (கா - சோலை) "திரு" என்னும் அடைமொழியோடு திருவானைக்கா ஆயிற்று. இந்நாளில் இத்தலத்தின் பெயரைத் திருவானைக்கோவில் என்றும் திருவானைக் காவல் என்றும் எழுதுகிறார்கள். எழுத்தாளர்களும் தவறான பெயருக்கு விளக்கம் வேறு தருகிறார்கள். இது சரிதானா? திருத்தப்பட வேண்டாவா?
நல்லவேளை; மயிலாடுதுறை இன்று தப்பித்துக் கொண்டது. மயில்கள் ஆடுகின்ற வளமார்ந்த காவிரித்துறையுடைய ஊர் மயிலாடுதுறை என்று சொல்லப் பெற்றது. இதனை மாயூரம் என்று பின்னாளில் வடமொழியால் குறித்தனர். (மயூரம் - மயில்). இந்த மயூரத்தை மக்கள் மாயவரம் ஆக்கிவிட்டார்கள். இன்றைக்கும் இந்தப் பெயரைப் பலரும் சொல்கிறார்கள். மாய்வதற்கு (சாவதற்கு ) வரம் தரும் ஊரா இது?
ஒப்பார் இல் அப்பன் - ஒப்பிலியப்பன் என்று பெருமாளுக்குப் பெயர் சூட்டிப் பாடிப் பரவினர் அடியார்கள். பரம்பொருள், ஒப்பு - நிகர் அற்றது அன்றோ? இப்பெருமான் எழுந்தருளியுள்ள ஊரின் பெயர் என்ன தெரியுமா? உப்பிலியப்பன்கோவில்.
ஒப்பு இலி என்பதைப் பேச்சு வழக்கில் உப்பு இலி - உப்பிலி என்று ஆக்கி, அந்தப் பெருமாளுக்கே உப்பில்லாத திருவமுது படைத்து வழிபடுகிறார்கள். கடவுளுக்கே உப்பில்லாப் பத்தியமா? தமிழை அறியாத கொடுமையல்லவா இது?
ஒற்று மிகுதலும் மிகாமையும்,ஒற்று மிகுதலை வலி மிகுதல் என்று இலக்கண நூலார் சொல்வர்.
வல்லெழுத்து ஆறனுள் க,ச,த,ப என்னும் நான்கு மட்டுமே மொழி முதல் எழுத்தாக வரும்.
ஒரு சொல்லிருக்க (நிலை மொழி) மற்றொரு சொல் வந்து சேரும்போது சில இடங்களில் இந்த க,ச,த,ப - என்பவை மிகும்.
சில இடங்களில் மிகா.
சிறந்த தமிழறிஞர்களின் நூல்களைப் படித்தாலே, மிகுதல், மிகாமைப் பற்றி இயல்பாகவே புரிந்து கொள்ள முடியும்.
எதற்கையா இந்த வம்பு?
க்,ச், த்,ப் எதுவும் போடாமல் இரண்டு சொற்களை அப்படியே எழுதிவிட்டால் என்ன என்று கருதுபவர் இருக்கிறார்கள். வாழை பழம், கீரை கறி - படித்துப் பாருங்கள், இயல்பாக உச்சரிக்க முடிகிறதா? வாழைப்பழம், கீரைக்கறி என்று சொன்னால்தான் நிறைவாக உணர்கிறோம். இந்த ஒற்றெழுத்து மிகுவதாலும், மிகாமையாலும் பெரிய பொருள் வேறுபாடு உண்டு என்பதைத் தமிழர் அறிய வேண்டும். பல எடுத்துக்காட்டுகளைத் தரலாம்.
மருந்து கடை - மருந்தைக் கடை
மருந்துக்கடை - மருந்து விற்கும் கடை
ஏழை சொல் - ஏழையின் வார்த்தை
ஏழைச்சொல் - ஏழு எண்ணிக்கையைச் சொல்
வேலை தேடு - ஒரு வேலையைத் தேடிக் கொள்
வேலைத் தேடு - வேல் என்னும் ஆயுதத்தைத் தேடு
நடுகல் - செத்தார்க்கு நடப்படுவது
நடுக்கல் - நடுவில் உள்ள கல்; உடம்பு நடுக்கல் (நடுக்குதல்)
சாகாடு - வண்டி
சாக்காடு - சாவு, மரணம்
கைமாறு - ஒருவர் கையிலிருந்து மற்றவர் கைக்கு மாறுவது
கைம்மாறு - நன்றிக்கடன்
பொய் சொல் - பொய் சொல்வாயாக
பொய்ச்சொல் - பொய்யான சொல்