பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)
மொழிப்பயிற்சி - 6:-
அண்ணாமலை பல்கலை கழகம் என்று எழுதுகின்ற பத்திரிகைகள் உள்ளன. சட்ட படிப்பு, கல்வி துறை, வருகை பதிவேடு என்றெல்லாம் வருவனவற்றை ஏடுகளில் பார்க்கும்போது தமிழ் நெஞ்சம் கொதிக்கிறது.
அதேநேரம், ஒற்று மிகக் கூடாத இடத்தில் ஒற்றெழுத்தைப் போட்டு எழுதி அந்தச் சொல் இன்று எங்கும் நீக்கமற நிறைந்துவிட்டது. அச்சொல்:- சின்னத்திரை என்பதாம். வீட்டில் பார்க்கும் தொலைக்காட்சியைத்தான் இப்படிச் சுட்டுகிறோம். திரைப்பட அரங்கிலிருப்பது பெரிய திரை. ஆதலின் இது சிறிய திரை. சிறிய, பெரிய, சின்ன, பெரிய எனும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது.
சிறிய திரை, சின்ன திரை, பெரிய தம்பி, சின்ன கடை, பெரிய பையன் என்று இயல்பாக எழுதிட வேண்டும்.
சின்னத் திரை என்றால் சின்னம் + திரை - ஏதோ ஒரு சின்னம் வரையப்பட்ட திரை என்று பொருளாகும். சிறிய கொடியை சின்ன கொடி என்றுதான் சொல்ல வேண்டும். சின்னக்கொடி என்றால் ஒரு சின்னம் (எழுகதிர், இரட்டை இலை, கதிர் அரிவாள், தாமரை) பொறித்த கொடி என்று பொருளாகும்.
தொலைக்காட்சி என்று சரியாகச் சொல்லும் நாம் தொலை பேசி என்று ஏன் பிழையாகச் சொல்லிப் பழகிவிட்டோம் என்பது தெரியவில்லை.
பேசியைத் தொலைத்துவிடு என்றன்றோ பொருள்தரும். தொலைவிலிருந்தும் காணக் கூடியது தொலைக்காட்சி எனில் தொலைவிலிருந்து பேசக் கூடியது தொலைப்பேசிதானே?
கை என்றால் உடம்பின் ஓர் உறுப்பு என்பதன்றிச் சிறியது என்னும் பொருளும் உண்டு. கைக்குட்டை, கைப்பை, கைக் குழந்தை, கைப்பெட்டி எனச் சொல்லுகிறோம். கையில் வைத்துப் பேசுகின்ற (சிறிய) பேசியும் கைப்பேசிதானே? ஏன் இதனை மட்டும் கைபேசி என்கிறார்கள்? பிழையன்றோ?
கைக்கடிகாரம் எவ்வளவு காலமாக வழங்கப்பட்டு வரும் சொல். எப்படி இந்தக் கைபேசி வந்ததோ? இப்படியே நீளச் சொன்னால் முடிவே இல்லை. ஆதலின் வல்லெழுத்து மிகும் இடங்கள், மிகா இடங்கள் பற்றி ஒரு சுருக்கமான பட்டியல் தருகிறோம்.
வல்லெழுத்து மிகும் இடங்கள்:
1. அ, இ, எ இம்மூன்று எழுத்தின் முன்னும், அந்த, இந்த, எந்த என்பவற்றின் முன்னும் மிகும்.
(எ-டு) அப்பையன், இப்பையன், எக்குழந்தை?
அந்தப் பையன், இந்தத் தாத்தா, எந்தச் சாத்தன்?
2.ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
(எ-டு) பூப் பறித்தான், கைக் குழந்தை
3.ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் முன் மிகும்.
(எ-டு) அறியாப் பிள்ளை, தீராத் துன்பம்
4.அகர, இகர ஈற்று முன் மிகும்.
(எ-டு) வரச் சொன்னான், ஓடிப் போனான்
5.வன்தொடர்க் குற்றுகரம் முன் மிகும்.
(எ-டு)எட்டுத் தொகை, கற்றுக் கொடுத்தான்
6. திரு, நடு, முழு, பொது என்னும் சொற்கள் முன் மிகும்.
(எ-டு) திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி,
7.இரண்டாம் வேற்றுமை, நான்காம் வேற்றுமை விரியின் பின் மிகும்.
(எ-டு) பூனையைப் பார்த்தான், கடைக்குப் போனான்.
8.பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்.
9.இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் மிகும்.
(எ-டு) தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம்
10. உவமைத் தொகையில் மிகும்.
(எ-டு) முத்துப்பல், கமலச் செங்கண்.