பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்
கவிக்கோ ஞானச்செல்வன்
நன்றி : தினமணிக்கதிர்
(தினமணிக்கதிரில் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதி வரும் கட்டுரை இங்கு மீள் பதிவு செய்கிறேன். விரும்புவோர் படித்துப்பயன் பெறுக.)
மொழிப்பயிற்சி - 12:-
குறைந்த படிப்புடைய வாசகர்களுக்கு மட்டுமல்லாது, நிரம்பப் படித்தவர்களும் ஊடகங்களில் பணியாற்றுபவர்களும் அறிய வேண்டும் என்றே சில நுட்பமான செய்திகளையும் இப்பகுதியில் எழுதி வருகிறோம். நம் பேச்சு வழக்கிலுள்ள சில எடுத்துக்காட்டுகளைக் காண்போம்.
"அவர்தான் இப்படிச் சொன்னார்."
இவ்வாக்கியம்,"அவர்தாம் இப்படிச் சொன்னார்" என்றிருத்தல் வேண்டும்.
அவன்தான், அவர்தாம், அதுதான், அவைதாம் என்பனவற்றை நோக்குக.
"அதுகளுக்கு என்ன தெரியும்?" "இது பற்றியெல்லாம் அதுகளுக்கு என்ன தெரியும்?" என்று இயல்பாகப் பேசுகிறோம். அவர்களுக்கு என்ன தெரியும் என்று சரியாகச் சொல்ல வேண்டும்.
உயர்திணையை அஃறிணையாக்கிப் பின் பன்மையை ஒருமையாக்கும் இரண்டு பிழைகளைத் தவிர்க்க வேண்டும். இந்தச் செயலுக்கு "நான் பொறுப்பல்ல" என்று முடித்தல் தவறு. "நான் பொறுப்பல்லேன்" என்று முடித்தல் வேண்டும். பன்மையில் சொன்னால் யாம் (நாம்) "பொறுப்பல்லோம்" அல்லது "பொறுப்பல்லேம்" என முடித்தல் வேண்டும்.
"அவர் தன் நாட்டிற்காக மிக அரும்பாடுபட்டார்". இந்த வாக்கியத்தில் பிழையுண்டா?
உண்டு.
"அவர் தம் நாட்டிற்காக" என்று திருத்துதல் வேண்டும்.
- அவன், அவள், அது வரும்போது "தன்" என்றும்,
- அவர் அவை வரும்போது "தம்" என்றும் இணைப்புச் செய்க.
"திருவள்ளுவர் தன் திருக்குறளில் சொல்லாத அறம் இல்லை". இவ்வாக்கியத்தில், "திருவள்ளுவர் தம் திருக்குறளில்" என்று ஒரு சிறிய திருத்தம் செய்தால் பிழையற்றதாகும்.
கவிதாயினி - சரிதானா?
பேராசிரியர், தலைமையாசிரியர் என்று ஆண்களைக் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை என்று பெண்களைக் குறிப்பது ஏன்?
பெண்ணுரிமை பேசும் மகளிரே கூட இது தம்மை குறைவு செய்கிறது என உணர்வது இல்லை. பெண்ணைப் பேராசிரியை, தலைமையாசிரியை எனக் குறிப்பிட்டால், ஆணைப் பேராசிரியன், தலைமையாசிரியன் என்று அன் விகுதி போட்டுச் சொல்ல வேண்டும்.
கவிதாயினி என்றும் பெண்ணுக்கு அடைமொழி தருகிறார்கள்.
கவிஞர் என்பது ஆண், பெண் இருவர்க்கும் பொதுதானே?
(அர்-மரியாதைப் பன்மை)
கவி,தா, இனி - இனிமேலாவது கவி தருக என்று பொருளாகாதோ?
மருத்துவர், பொறியாளர், முதல்வர், எழுத்தாளர் என்றெல்லாம் ஆண், பெண் இருபாலரையும் குறிக்கும் நாம் பேராசிரியை, தலைமையாசிரியை, கவிதாயினி என்று சிலவற்றைப் பெண்களுக்குரியதாகப் பயன்படுத்துதல் ஏனோ? ஆண் ஆசிரியர் ,பெண் ஆசிரியர் என்று வேறுபடுத்தி அறிவதற்காக இப்படிக் குறிக்கிறோம் என்பார் சிலர்.
அந்த அடைமொழிக்குப் பின் வருகின்ற பெயரை வைத்து, அவர் ஆண் அல்லது பெண் என்று அறியமுடியுமே!
"உம்" என்னும் இடைச்சொல்பெயர், வினை, இடை, உரி எனும் நான்கு வகைச் சொற்களுள் பெயரும் ஆகாது, வினையும் ஆகாது, குணம் சுட்டும் உரிச்சொல்லும் ஆகாது, பெயர்க்கும், வினைக்கும் இடையே நின்று செயற்படுபவை இடைச் சொற்கள்.
உவமை உருபுகள் (போல, போன்ற, ஒத்த, நிகர்த்த) அசைநிலைகள் ஏகாரம், ஓகாரம் போன்றவை.
உம் எனும் இணைப்புச் சொல். இவையெல்லாம் இடைச்சொற்கள் எனப்படும்.
"முத்தும், மணியும், பவளமும் நிறைந்திருந்தன".
இவ்வாக்கியத்தில், வரும் "உம்" என்பது இடைச்சொல்.
- கபிலரும், பரணரும் வந்தனர்.
- பூரியும் கிழங்கும், பொங்கலும் வடையும்
இவற்றில் வருகின்ற "உம்" இணைப்பை உண்டாக்கும் ஓர் இடைச்சொல். ஆனால் இந்நாளில், "கடிதம் போடவும், வந்து செல்லவும், ஐயாவைப் பார்க்கவும்" என்று பலரும் சொல்லி வருகிறோம். ஒன்றோடொன்று இணைக்கும் ஒரு சொல்லை கட்டளைப் பொருளில் வினைமுற்றாகப்
பயன்படுத்துகிறோம். இது பிழையன்றோ?
ஆங்கிலமொழியின் தாக்கம் காரணமாக, "உம்" பயன்படுத்த வேண்டிய இடத்தில் புதிதாக "மற்றும்" என்றொரு சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
தமிழில்,"மற்று" எனும் அசைச் சொல் உண்டு.
மற்றொன்று - வேறொன்று என்ற பொருள் உண்டு.
ஆனால், "இந்நாளில் பேச்சு, பாட்டு மற்றும் நடனப் போட்டிகள் நடைபெறும்" என்று ஆங்கிலத்தில், சிலவற்றைச் சொல்லி இறுதிக்கு முன்னதாக "and" சேர்ப்பது போல் "மற்றும்" சேர்த்து வருகிறோம். இது சரிதானா?
"சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பயிற்சி வகுப்பு நடைபெறும்"
இந்த மற்றும் தேவைதானா?
அருவி - நீர்வீழ்ச்சி எல்லாப் பொருள்களுக்கும் தமிழில் சொல் உண்டு.
நமக்குப் புதிதாக அறிமுகமான வந்தேறிய பொருள் என்றால் அதற்கும் ஓர் ஆக்கச் சொல்லைக் கண்டறிவது தமிழில் எளிதே. கடல், மலை, அருவி எல்லாம் தமிழில் என்றென்றும் இருப்பவை. மலையிலிருந்து நீர் கொட்டுவதை "அருவி" என்று தமிழன் குறித்தான். நீர் உயரத்திலிருந்து ...கீழே விழுவதால் "வாட்டர் ஃபால்ஸ்" என்று ஆங்கிலத்தில் குறித்தார்கள். இதை மொழிபெயர்த்து நீர்வீழ்ச்சி என்று சொல்வது சரியா? அருவி இருக்க நீர்வீழ்ச்சி எதற்கு? தாய்ப்பால் இருக்கப் புட்டிப் பால் கொடுப்பதேன்?